ஸ்டெம்பு பின்னாடி தோனி இருப்பது சப்போர்ட்டா இருக்கு

நூர் அகமது ஓபன் டாக்

சென்னை

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று (மார்ச் 23) நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. முதலில் பேட் செய்த மும்பை அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்களே எடுக்க முடிந்தது. அந்த அணியின் ரன்குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தியதில் ரிஸ்ட் ஸ்பின்னரான நூர் அகமது முக்கிய பங்கு வகித்தார்.

முக்கியமான கட்டத்தில் அவர், அதிரடி பேட்ஸ்மேன்களான சூர்யகுமார் யாதவ் (29), திலக் வர்மா (31) ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார். அதிலும் சூர்யகுமார் யாதவை, தோனி மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் செய்த விதம் அற்புதமாக இருந்தது. பின்வரிசையில் ராபின் மின்ஸ், நமன் திர் ஆகியோரையும் பெவிலியனுக்கு திருப்பிய நூர் அகமது 4 ஓவர்களை வீசி 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விகெட்களை கைப்பற்றினார்.

கடந்த வருடம் நடைபெற்ற மெகா ஏலத்தில் நூர் அகமதுவை கடுமையாக போராடி ரூ.10 கோடிக்கு சிஎஸ்கே வாங்கியிருந்தது. சுழலுக்கு சாதகமான சேப்பாக்கத்தில் நூர் அகமதுவும் முதல் ஆட்டத்திலேயே அணி நிர்வாகம் தன் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றியுள்ளார். பொதுவாக சேப்பாக்கம் ஆடுகளத்தில் ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கு எதிராக ரன்கள் குவிப்பது கடினம். ஏனெனில் மைதானத்தின் பக்கவாட்டு பவுண்டரி எல்லைகள் தொல்லை கொடுக்கும். இதை நூர் அகமது சரியாக பயன்படுத்திக் கொண்டு லைன் அன்ட் லெந்த்தை அருமையாக கையாண்டு மும்பை பேட்ஸ்மேன்களை கட்டிப்போட்டார்.

ஆட்ட நாயகன் விருது வென்ற நூர் அகமது கூறும்போது, “சேப்பாக்கம் மைதானத்தல் ஐபிஎல் தொடரில் விளையாடுவது சிறப்பானதாக உணர்கிறேன். அணியின் வெற்றிக்கு பங்களித்ததில் மகிழ்ச்சி. பந்தை சரியான ஏரியாவில் தரையிறக்குவதிலேயே கவனம் செலுத்தினேன். சூர்ய குமார் யாதவின் விக்கெட் ஸ்பெஷல். தோனி செய்த ஸ்டெம்பிங் வியக்கவைத்தது. ஸ்டெம்புகளுக்குப் பின்னால் மஹி பாய் போன்ற ஒருவர் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, இது எனக்கு ஒரு பெரிய ஆதரவு கொடுக்கிறது” என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top