கேப்பிடல்ஸுக்கு 4வது வெற்றி
பெங்களூரு: ஐபிஎல் 18வது சீசன் 24வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதிய டெல்லி கேப்பிடல்ஸ், கே.எல்.ராகுலின் அதிரடி ஆட்டத்தால் தொடர்ச்சியாக 4வது வெற்றியை வசப்படுத்தியது.
எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஃபில் சால்ட் – விராத் கோஹ்லி இணைந்து ஆர்சிபி இன்னிங்சை தொடங்கினர்.

சால்ட் எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் எகிற… ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 3.4 ஓவரில் 61 ரன் சேர்த்து மிரட்டியது. துரதிர்ஷ்டவசமாக சால்ட் 37 ரன் (17 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசிய நிலையில் ரன் அவுட்டானார்.
அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 1 ரன்னில் வெளியேற, கோஹ்லி 22 ரன் (14 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), லிவிங்ஸ்டன் 4, ஜிதேஷ் ஷர்மா 3 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். கேப்டன் ரஜத் பத்திதார் 25, க்ருணால் பாண்டியா 18 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
கடைசி கட்டத்தில் டிம் டேவிட் அதிரடி காட்ட… ஆர்சிபி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன் குவித்தது.டேவிட் 37 ரன் (20 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), புவனேஷ்வர் குமார் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கேப்பிடல்ஸ் பந்துவீச்சில் விப்ராஜ் நிகம், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட், முகேஷ் குமார், மோகித் ஷர்மா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 164 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் 4.3 ஓவரில் 30 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. டு பிளெஸ்ஸி 2, பிரேசர் மெக்கர்க், அபிஷேக் போரெல் தலா 7 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்த நிலையில், கே.எல்.ராகுல் – கேப்டன் அக்சர் படேல் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடினர். அக்சர் 15 ரன் எடுத்து சுயாஷ் ஷர்மா பந்துவீச்சில் டேவிட் வசம் பிடிபட, டெல்லி அணி மீண்டும் பின்னடைவை சந்தித்தது. எனினும், கே.எல்.ராகுல் – டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி 5வது விக்கெட்டுக்கு உறுதியுடன் போராட… ஆட்டம் டெல்லிக்கு சாதகமாகத் திரும்பியது. ராகுல் 37 பந்தில் அரை சதம் அடித்தார்.
இந்த ஜோடியை பிரிக்க ஆர்சிபி பவுலர்கள் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்ட ராகுல் விஸ்வரூபமெடுக்க, டெல்லி கேப்பிடல்ஸ் 17.5 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
ராகுல் 93 ரன் (53 பந்து, 7 பவுண்டரி, 6 சிக்சர்), ஸ்டப்ஸ் 38 ரன்னுடன் (23 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இருவரும் 5வது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 111 ரன் சேர்த்தது ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனையாக அமைந்தது.
ஆர்சிபி பந்துவீச்சில் புவனேஷ்வர் 2, யஷ் தயாள், சுயாஷ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ச்சியாக 4வது வெற்றியைப் பதிவு செய்து அசத்திய டெல்லி 8 புள்ளிகளுடன் தொடர்ந்து 2வது இடத்திலும், ஆர்சிபி 5 போட்டியில் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 3வது இடத்திலும் நீடிக்கின்றன.
இக்கட்டான சமயத்தில் களமிறங்கி அமர்க்களப்படுத்திய கே.எல்.ராகுல் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.