முகேஷ் விக்கெட் வேட்டை * ராகுல் 5000
லக்னோ: சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
வாஜ்பாய் ஏகனா ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் அக்சர் படேல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்சை பேட் செய்ய அழைத்தார். மார்க்ரம், மிட்செல் மார்ஷ் இணைந்து எல்எஸ்ஜி இன்னிங்சை தொடங்கினர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10 ஓவரில் 87 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. மார்க்ரம் 52 ரன் (33 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி சமீரா பந்துவீச்சில் ஸ்டப்ஸ் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த நிகோலஸ் பூரன் 9 ரன், அப்துல் சமத் 2 ரன்னில் வெளியேற, சூப்பர் ஜெயண்ட்ஸ் திடீர் சரிவை சந்தித்தது.
மிட்செல் மார்ஷ் 45 ரன் (36 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். ஒரு விக்கெட் இழப்புக்கு 99 ரன் என்ற நிலையில் இருந்து 110/4 என எல்எஸ்ஜி தடுமாறியது. இந்த நிலையில், டேவிட் மில்லர் – பதோனி இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடினர்.
முகேஷ் குமார் வீசிய கடைசி ஓவரின் முதல் 3 பந்துகளையும் ஹாட்ரிக் பவுண்டரியாக விரட்டிய ஆயுஷ் பதோனி 36 ரன் (21 பந்து, 6 பவுண்டரி) விளாசி கிளீன் போல்டானார். கேப்டன் ரிஷப் பண்ட் டக் அவுட்டாக, லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன் சேர்த்தது.
மில்லர் 14 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி பந்துவீச்சில் முகேஷ் குமார் 4 ஓவரில் 33 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். சிக்கனமாகப் பந்துவீசிய ஸ்டார்க், சமீரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 160 ரன் என்ற சற்றே எளிய இலக்குடன் களமிறங்கியது டெல்லி கேப்பிடல்ஸ். அபிஷேக் போரெல், கருண் நாயர் இணைந்து துரத்தலை தொடங்கினர். கருண் 15 ரன் எடுத்து மார்க்ரம் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற வெளியேறினார்.
அடுத்து போரெல் – கே.எல்.ராகுல் ஜோடி சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 69 ரன் சேர்த்தது.போரெல் 51 ரன் (36 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி மார்க்ரம் பந்துவீச்சில் மில்லரிடம் பிடிபட்டார். இதையடுத்து ராகுல் – கேப்டன் அக்சர் படேல் இணைந்து அதிரடியில் இறங்க, டெல்லி அணி 17.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்து அபாரமாக வென்றது.

கே.எல்.ராகுல் 57 ரன் (42 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), அக்சர் படேல் 34 ரன்னுடன் (20 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி அணி 8 போட்டியில் 6வது வெற்றியை வசப்படுத்தி 12 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது. லக்னோ 10 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.
பந்துவீச்சில் அசத்திய முகேஷ் குமார் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
ஐபிஎல் தொடரில் 5,000 ரன் என்ற மைல் கல்லை கே.எல்.ராகுல் அதிவேகமாக எட்டினார். அவர் 130 இன்னிங்சில் இந்த சாதனையை நிகழ்த்தி முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.