srh 4

சிஎஸ்கே கோட்டையை தகர்க்குமா எஸ்ஆர்ஹெச்

சென்னை

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்ஹெச்) அணியுடன் மோதுகிறது.

நடப்பு சீசனில் இரு அணிகளும் தலா 8 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 6 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளன. எனினும் நிகர ரன் ரேட் அடிப்படையில் ஹைதராபாத் அணி (-1.361) 9-வது இடத்திலும், சிஎஸ்கே (-1.392) 10-வது இடத்திலும் உள்ளன.

csk vs srh

இதனால் எஞ்சியுள்ள அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பெற முடியும் என்ற நெருக்கடி இரு அணிக்கும் உள்ளது.

சிஎஸ்கே அணி நடப்பு சீசனில் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் வெற்றிகளை பெற முடியாமல் தவித்து வருகிறது. மந்தமான ஆடுகளத்துக்கு தகுந்தபடி சிஎஸ்கே அணி தகவமைத்துக் கொண்டு விளையாட முடியாதது பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது. சேப்பாக்கத்தில் இந்த சீசனில் 4 ஆட்டங்களில் விளையாடி உள்ள சிஎஸ்கே 3 தோல்விகளை பதிவு செய்துள்ளது.

இந்த ஹாட்ரிக் தோல்விகளுக்கு இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்கக்கூடும். காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் விலகிa பின்னர் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ள தோனி அணியில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். பந்து வீச்சில் அன்ஷுல் கம்போஜ் பேட்டிங்கில் ஷேக் ரஷித், ஆயுஷ் மகத்ரே ஆகியோர் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

இதில் பேட்டிங்கில் ஷேக் ரஷித், ஆயுஷ் மகத்ரே ஆகியோர் நம்பிக்கை அளித்துள்ளனர். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். பேட்டிங்கை பலப்படுத்தும் விதமாக தென் ஆப்பிரிக்க அதிரடி வீரரான 22 வயதான டெவால்ட் பிரேவிஸ் இன்றைய ஆட்டத்தில் களமிறங்க வாய்ப்பு உள்ளது.

பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்ஹெச் அணி ஆட்டத்தின் சூழ்நிலையையும், ஆடுகளத்தின் சூழ்நிலையையும் கருத்தில் கொள்ளாமல் எல்லா நேரத்திலும் தாக்குதல் ஆட்டம் தொடுப்பது பலவீனத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சீசனில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஜோடியால் இந்த சீசனில் தொடர்ச்சியான செயல் திறனை வெளிப்படுத்த முடியவில்லை. நடுவரிசை பேட்ஸ்மேன்களில் ஹென்ரிச் கிளாசனை தவிர்த்து இஷான் கிஷன், நித்திஷ் குமார் ரெட்டி ஆகியோர் அழுத்தத்தின் கீழ் சிறந்த திறனை வெளிப்படுத்த முடியாமல் திணறுகின்றனர்.

ஐபிஎல் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை சிஎஸ்கே அணியை, ஹைதராபாத் அணி வென்றது இல்லை. அந்த அணி சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக 5 ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் தோல்வி கண்டுள்ளது.

கடைசியாக 2024-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி இரு அணிகளும் சேப்பாக்கத்தில் விளையாடி இருந்தன. இதில் சிஎஸ்கே 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. இதற்கு இன்றைய ஆட்டத்தில் தீர்வு காண முயற்சிக்கக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top