ஆசிய கோப்பை கிரிக்கெட் விலகலுக்கு பிசிசிஐ மறுப்பு

மும்பை

வளர்ந்து வரும் மகளிர் அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதம் ஆடவருக்கான ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த இரு தொடர்களில் இருந்தும் இந்திய அணி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆஃப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து பாகிஸ்தானுடன், கிரிக்கெட் போட்டிகள் விளையாடுதை தவிர்க்கும் பொருட்டு இந்த நடவடிக்கையை பிசிசிஐ எடுத்துள்ளதாகவும், இதுதொடர்பாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மொஹ்சின் நக்வி உள்ளார். இவர், பாகிஸ்தான் அரசாங்கத்தின் உள்துறை அமைச்சராகவும் உள்ளார். இதன் காரணமாகவே பிசிசிஐ, ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் ஆசிய கோப்பையில் இருந்து இந்திய அணி விலகுவதாக வெளியான தகவல்களை பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆசிய கோப்பை அல்லது வேறு எந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிகழ்வு தொடர்பாகவும் நாங்கள் விவாதிக்கவும் இல்லை, எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்த சூழ்நிலையில் எங்கள் கவனம் ஐபிஎல் மற்றும் அதைத் தொடர்ந்து வரும் இங்கிலாந்து தொடர்களில் மட்டுமே உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top