ஆசிய தடகளத்தில் அவினாஷ் சேபிள், ஜோதி யார்ராஜி தங்கம் வென்று அசத்தல்

மகளிர் தொடர் ஓட்டத்திலும் இந்தியா தங்கம் வென்றது

குமி

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அவினாஷ் சேபிள், ஜோதி யார்ராஜி தங்கப் பதக்கம் வென்றனர்.

தென் கொரியாவின் குமி நகரில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவருக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீப்பிள்சேஸில் இந்தியாவின் அவினாஷ் சேபிள் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

அவர், பந்தைய தூரத்தை 8:20.92 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். ஜப்பானின் யுடாரோ நினே (8:24.41) வெள்ளிப் பதக்கமும், கத்தாரின் ஜகாரியா எலாஹ்லாமி (8:27.12) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 36 வருடங்களுக்குப் பிறகு ஸ்டீப்பிள்சேஸில் இந்திய வீரர் தற்போதுதான் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். கடைசியாக 1989-ம் ஆண்டு தினா ராம் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அதற்கு முன்னதாக 1975-ம் ஆண்டு ஹர்பெல் சிங் முதன்முறையாக தங்கம் கைப்பற்றியிருந்தார்.

மகளிருக்கான 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஜிஸ்னா மேத்யூ, ரூபால் சவுத்ரி, ரஜிதா, சுபா வெங்கடேசன் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி பந்தய தூரத்தை 3:34.18 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றது. வியட்நாம் (3:34.77) வெள்ளிப் பதக்கமும், இலங்கை (3:36.67) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றின.

ஆடவருக்கான 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஜெய் குமார், தர்மவீர் சௌத்ரி, மனு தெக்கினாலில் சாஜி, விஷால் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி பந்தய தூரத்தை 3:03.67 விநாடிகளில் எட்டி 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது. கத்தார் (3:03.52) தங்கப் பதக்கமும், சீனா (3:03.73) வெண்கலப் பதக்கமும் பெற்றன.

மகளிருக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் ஜோதி யார்ராஜி பந்தய தூரத்தை 12.96 விநாடிகளில் கடந்து புதிய சாதனையுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.

இதற்கு முன்னர் 1998-ம் ஆண்டு கஜகஸ்தானின் ஓல்கா ஷிஷிகினா, 2011-ம் ஆண்டு சீனாவின் சன் யாவெய் ஆகியோர் 13.04 விநாடிகளில் இலக்கை எட்டியதே சாதனையாக இருந்தது. இதை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார் ஜோதி யார்ராஜி.

2023-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பிலும் ஜோதி யார்ராஜி தங்கப் பதக்கம் வென்றிருந்தார். இதன் மூலம் 100 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தை தக்கவைத்துக் கொண்ட 5-வது வீராங்கனை என்ற பெருமையை அவர், பெற்றுள்ளார்.

இதற்கு முன்னர் ஜப்பானின் எமி அகிமோட்டோ (1979, 1981, 1983), சீனாவின் ஜாங் யூ (1991, 1993), சீனாவின் சு யின்பிங் (2003, 2005), சீனாவின் சன் யாவே (2009, 2011) ஆகியோர் தங்கப் பதக்கத்தை தக்கவைத்திருந்தனர்.

மகளிருக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் அன்சி சோஜன் (6.33மீட்டர்) வெள்ளிப் பதக்கமும், ஷைலி சிங் (6.30 மீட்டர்) வெண்கலப் பதக்கமும் வென்றனர். ஈரானின் ரெய்ஹானே மொபினி (6.40 மீட்டர்) தங்கப் பதக்கம் வென்றார்.

நேற்று ஒரேநாளில் மட்டும் இந்தியா 3 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கம் வென்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top