நடுவருடன் வாக்குவாதம் செய்த அஸ்வின்

கோவை

டிஎன்பில் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் கோவையில் நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நடப்பு சாம்பியனான திண்டுக்கல் அணி 16.2 ஓவர்களில் 93 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அதிகபட்சமாக ஷிவம் சிங் 30, கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 18, ஆர்.கே.ஜெயந்த் 18 ரன்கள் சேர்த்தனர். 94 ரன்கள் இலக்குடன் பேட் செய்த திருப்பூர் அணி 11.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. துஷார் ரஹேஜா 39 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் விளாசினார். அமித் சாத்விக் 13, ராதாகிருஷ்ணன் 14 ரன்கள் சேர்த்தனர்.

இந்த ஆட்டத்தின் போது திண்டுக்கல் அணியின் தொடக்க வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் 18 ரன்களில் இருந்த போது இடது கை சுழற்பந்து வீச்சாளரான சாய் கிஷோர் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். லெக் ஸ்டெம்புக்கு வெளியே பிட்ச் ஆகி வந்த பந்தை அஸ்வின் முட்டு போட்டு விக்கெட் கீப்பருக்கு பின்னால் அடிக்க முயன்றார்.

ஆனால் பந்து கால்காப்பை தாக்க, சாய் கிஷோர் அப்பீல் செய்ததால் களநடுவரான கிருத்திகா அவுட் கொடுத்தார். இதனால் அஸ்வின் அதிர்ச்சி அடைந்தார். அவர், நடுவர் கிருத்திகாவிடம் சென்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். பந்து லெக் ஸ்டெம்புக்கு வெளியே பிட்ச் ஆனது என எடுத்துக் கூறினார். ஆனால் கிருத்திகா அதை, காது கொடுத்து கேட்கவில்லை. நடுவரின் முடிவே இறுதி என்பதால் அஸ்வின் விரக்தியுடன் களத்தில் இருந்து வெளியேறினார். இது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top