இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான 3-வது டி 20 கிரிக்கெட் போட்டி குவாஹாட்டியில் இன்று (25-ம் தேதி) நடைபெற்றது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 40 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் சேர்த்தார்.
மார்க் சாப்மேன் 32, கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 27 ரன்கள் சேர்த்தனர். டெவன் கான்வே 1, டிம் ஷெய்பர்ட் 12, ரச்சின் ரவீந்திரா 4, டேரில் மிட்செல் 14 ரன்களில் நடையை கட்டினர்.
இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 4 ஓவர்களை வீசி 17 ரன்களை வழங்கி 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஹர்திக் பாண்டியா, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், ஹர்ஷித் ராணா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
154 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 10 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா 20 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 68 ரன்களும், கேப்டன் அபிஷேக் சர்மா 26 பந்துகளில், 3 சிக்ஸர்க,ள 6 பவுண்டரிகளுடன் 57 ரன்களும் விளாசினர்.
முன்னதாக சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்காமலும், இஷான் கிஷன் 13 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 28 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை 3-0 என கைப்பற்றியது.
நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடைபெற்ற 2-வது போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி கண்டிருந்தது. 4-வது போட்டி வரும் 28-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.

