T 20 world cup strip

வங்கதேசம் டி 20 உலகக் கோப்பையில் நீக்கம்

ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா, இலங்கையில் தொடங்குகிறது. 20 அணிகள் கலந்துகொள்ளும் இந்தத் தொடரில் வங்கதேச அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்றிருந்தது. அந்த அணி பங்கேற்கும் லீக் ஆட்டங்கள் கொல்கத்தா மற்றும் மும்பையில் நடைபெறும் வகையில் அட்டவணை வெளியாகி இருந்தது.

இதற்கிடையே வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்டாபிஸுர் ரஹ்மானை, ஐபிஎல் தொடரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி திடீரென விடுவித்தது. இதை காரணம் காட்டி வங்கதேச கிரிக்கெட் வாரியம் டி 20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு செல்லமாட்டாம் என போர்க்கொடி தூக்கியது.

ICC Groups

தங்களது வீரர்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை எனக்கூறிய வங்கதேச வாரியம், தங்களது அணி பங்கேற்கும் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தது. ஆனால் இந்தியாவில் பாதுகாப்பு விஷயங்கள் குறித்து ஆய்வு செய்த ஐசிசி, வங்கதேசம் கூறம் குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என கூறியது.

இதற்கிடைய வங்கதேசத்துக்கு பாகிஸ்தான் வாரியம் ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து ஐசிசி, வங்கதேச வாரியத்தின் கோரிக்கை மீது வாக்கெடுப்பு நடத்தியது. இதில் இலங்கைக்கு போட்டியை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 14 வாக்குகள் பதிவாகின. ஆதரவாக 2 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதையடுத்து வங்கதேசத்துக்கு கூடுதலாக 24 மணி நேர அவகாசத்தை ஐசிசி வழங்கியது. ஆனால் ஐசிசிக்கு முறைப்படி எந்தவித தகவலையும் தெரிவிக்காமல் வங்கதேச வாரியம் தன்னிச்சையாக பத்திரிகையாளர்களை அழைத்து இந்தியாவுக்கு நாங்கள் செல்லமாட்டோம் என அறிவித்தது.

இந்நிலையில் விதித்த கெடு முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) ஐசிசி-யிடம் இருந்து வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் அமினுல் இஸ்லாமுக்கு இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது. அதில், “டி 20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு இந்தியா வருவது தொடர்பாக 24 மணி நேரத்துக்குள் பதில் ஏதும் தெரிவிக்காததால் மாற்று அணியாக ஸ்காட்லாந்தை சேர்க்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பாக ஐசிசி, அனைத்து கிரிக்கெட் வாரிய உறுப்பினர்களுக்கும் தகவல் அனுப்பி உள்ளது. டி 20 உலகக் கோப்பையில் இருந்து வங்கதேச அணி நீக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து ஸ்காட்லாந்து அணி ‘சி’ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த அணி பிப்ரவரி 7-ம் தேதி தனது முதல் ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகளை எதிர்கொள்ளும். தொடர்ந்து 9-ம் தேதி இத்தாலி, 14-ம் தேதி இங்கிலாந்து, 17-ம் தேதி நேபாளம் அணிகளுடன் பலப்பரீட்சை நடத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top