RCB Champs scaled

18 ஆண்டுகளில் முதல் முறையாக ஆர்சிபி சாம்பியன்

கோஹ்லி ஆனந்தக் கண்ணீர் * சோகத்தில் மூழ்கியது பஞ்சாப் கிங்ஸ்

அகமதாபாத்: ஐபிஎல் டி20 தொடரின் 18வது சீசன் பைனலில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதிய ஆர்சிபி 6 ரன் வித்தியாசத்தில் போராடி வென்று 18 ஆண்டுகளில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிஅசத்தியது.

RCB Champs

மோடி ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான பைனலில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்துவீச முடிவு செய்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன் குவித்தது.

விராத் கோஹ்லி அதிகபட்சமாக 43 ரன் (35 பந்து, 3 பவுண்டரி) எடுத்தார். சால்ட் 16, மயாங்க் அகர்வால் 24, கேப்டன் ரஜத் பத்திதார் 26, லிவிங்ஸ்டன் 25, ஜிதேஷ் ஷர்மா 24 ரன் (10 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), ஷெப்பர்ட் 17 ரன் (9 பந்து) விளாசினர்.

பஞ்சாப் பந்துவீச்சில் அர்ஷ்தீப், ஜேமிசன் தலா 3 விக்கெட், ஒமர்ஸாய், வைஷாக், சாஹல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 191 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன் எடுத்து வெறும் 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

ஆர்யா 24, பிரப்சிம்ரன் 26, இங்லிஸ் 39, வதேரா 15 ரன் எடுக்க, அதிரடி வீரர்கள் ஷ்ரேயாஸ் 1, ஸ்டாய்னிஸ் 6 ரன்னில் வெளியேறியது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. கடைசி வரை போராடிய ஷஷாங்க் சிங் 61 ரன் (30 பந்து, 3 பவுண்டரி, 6 சிக்சர்), ஜேமிசன் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஹேசல்வுட் வீசிய கடைசி ஓவரில் 29 ரன் தேவைப்பட்ட நிலையில், முதல் 2 பந்துகளில் ரன் எடுக்காத ஷஷாங்க் சிங் அடுத்த 4 பந்துகளையும் 6, 4, 6, 6 என விரட்டி அடித்தும் வெற்றியை வசப்படுத்த முடியாததால் பஞ்சாப் கிங்ஸ் தரப்பு சோகத்தில் ஆழ்ந்தது.

17 சீசனில் 3 முறை பைனலுக்கு முன்னேறியும் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வந்த ஆர்சிபி அணி இம்முறை 6 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் முறையாக ஐபிஎல் சாம்பியனாகி சாதனை படைத்தது.

Krunal

ஆர்சிபி பந்துவீச்சில் 4 ஓவரில் 17 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றிய க்ருணால் பாண்டியா ஆட்ட நாயகன் விருது பெற்றார். புவனேஷ்வர் 2, தயாள், ஹேசல்வுட், ஷெப்பர்ட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் 18 ஆண்டு காத்திருப்பு முடிவுக்கு வந்து முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றதை நம்ப முடியாமல் விராத் கோஹ்லி ஆனந்தக் கண்ணீர் வடித்தார். சக வீரர்கள் அவரை ஆரத்தழுவி தங்கள் வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டனர். அந்த அணியின் முன்னாள் நட்சத்திரங்கள் டி வில்லியர்ஸ், கிறிஸ் கேல் மற்றும் பயிற்சியாளர்கள் ஆண்டி பிளவர், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் இந்த வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

பெங்களூருவில் ரசிகர்களின் உற்சாகம் கட்டுக்கடங்காது கரை புரண்டோடிய நிலையில் விடிய விடிய கொண்டாடி தீர்த்தனர்.

  • மும்பை இந்தியன்சின் சூரியகுமார் யாதவ் மிக மதிப்பு வாய்ந்த வீரர் விருதை தட்டிச் சென்றார் (717 ரன்).
  • அதிக ரன் குவிப்புக்கான ஆரஞ்சு தொப்பி குஜராத் டைட்டன்ஸ் தொடக்க வீரர் சாய் சுதர்சன் வசமானது (759 ரன்).
  • விக்கெட் வேட்டையில் குஜராத்தின் பிரசித் கிருஷ்ணா (25 விக்கெட்) முதலிடம் பிடித்து ஊதா தொப்பியை வசப்பட்டுத்தினார்.
  • அதிக சிக்சர்கள் விளாசியதற்கான விருது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் நிகோலஸ் பூரனுக்கு (40 சிக்சர்) வழங்கபட்டது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top