33 ரன் வித்தியாசத்தில் எல்எஸ்ஜி வெற்றி
அகமதாபாத்: ஐபிஎல் 18வது சீசன் 64வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 33 ரன் வித்தியாசத்தில் வென்றது.

மோடி ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஜிடி கேப்டன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். எய்டன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ் இணைந்து லக்னோ இன்னிங்சை தொடங்கினர். எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் எகிறிய இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 9.4 ஓவரில் 91 ரன் சேர்த்து அதிரடி தொடக்கத்தை கொடுத்தது.
மார்க்ரம் 36 ரன் (24 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி சாய் கிஷோர் பந்துவீச்சில் ஷாருக் கான் வசம் பிடிபட்டார். அடுத்து மார்ஷ் – நிகோலஸ் பூரன் இணைந்து குஜராத் பந்துவீச்சை பதம் பார்க்க… எல்எஸ்ஜி ஸ்கோர் இறக்கை கட்டிப் பறந்தது.
மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பதைப் போல இருவரும் போட்டி போட்டுக்கொண்டு பவுண்டரி, சிக்சர்களை பறக்கவிட்டு குஜராத் பவுலர்களை நோகடித்தனர். 33 பந்தில் அரை சதம் அடித்த மார்ஷ் 56 பந்தில் சதத்தை நிறைவு செய்து அசத்தினார்.
இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 121 ரன் சேர்த்து மிரட்டியது. மிட்செல் மார்ஷ் 117 ரன் (64 பந்து, 10 பவுண்டரி, 8 சிக்சர்) விளாசி அர்ஷத் கான் பந்துவீச்சில் ரூதர்போர்டிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 235 ரன் குவித்தது. பூரன் 56 ரன் (27 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்), கேப்டன் ரிஷப் பண்ட் 16 ரன்னுடன் (6 பந்து, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதைத் தொடர்ந்து, 236 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 202 ரன் மட்டுமே எடுத்து 33 ரன் வித்தியாசத்தில் போராடித் தோற்றது.
முன்னணி வீரர்கள் சாய் சுதர்சன் 21 ரன் (16 பந்து, 4 பவுண்டரி), கேப்டன் கில் 35 ரன் (20 பந்து, 7 பவுண்டரி), பட்லர் 33 ரன் (18 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), ரூதர்போர்டு 38 ரன் (22 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), ஷாருக் கான் 57 ரன் (29 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினாலும்… கடைசி கட்ட நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால், கடுமையாகப் போராடியும் குஜராத் அணியால் வெற்றிக் கோட்டை எட்ட முடியவில்லை.
ரஷித் கான் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். லக்னோ பந்துவீச்சில் வில் ஓ’ரூர்கே 4 ஓவரில் 27 ரன்னுக்கு 3 விக்கெட் கைப்பற்றினார். ஆவேஷ் கான், ஆயுஷ் பதோனி தலா 2, ஆகாஷ் சிங், ஷாபாஸ் அகமது தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
அதிரடியாக சதம் விளாசிய மார்ஷ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த போட்டியில் தோற்றாலும் குஜராத் தொடர்ந்து முதலிடத்திலேயே நீடிக்கிறது என்றாலும், எஞ்சியுள்ள லீக் ஆட்டங்களின் முடிவைப் பொறுத்தே முதல் 4 இடங்களில் உள்ள அணிகளின் இறுதி நிலை தீர்மானிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.