WI Vs Ireland

மேற்கு இந்தியத் தீவுகளை வீழ்த்தியது அயர்லாந்து

 டப்ளின்

 மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது அயர்லாந்து அணி.

 மேற்கு இந்தியத் தீவுகள் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் டப்ளின் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 303 ரன்கள் குவித்தது.

 தனது 9-வது சதத்தை விளாசிய தொடக்க வீரரான ஆண்ட்ரூ பால்பிர்னி 138 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் விளாசினார். ஹாரி டெக்டர் 56, கேப்டன் பால் ஸ்டிர்லிங் 54, லார்கன் டக்கர் 30 ரன்கள் சேர்த்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி சார்பில் மேத்யூ போர்டு 3, அல்சாரி ஜோசப் 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

 304 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 31 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்களை தாரை வார்த்தது. எவின் லீவிஸ் 2, கீசி கார்ட்டி 6, பிரண்டன் கிங் 19, அமிர் ஜாங்கு 0, கேப்டன் ஷாய் ஹோப் 2 ரன்களில் நடையை கட்டினர். சற்று தாக்குப்பிடித்து விளையாடிய ராஸடன் சேஸ் 76 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்த நிலையில் டாக்ரெல் பந்தில் போல்டானார்.

 ஜஸ்டின் கீரிவ்ஸ் 35, மேத்யூ போர்டு 38, அல்சாரி ஜோசப் 0, குடகேஷ் மோதி 8 ரன்களில் வெளியேற மேற்கு இந்தியத் தீவுகள் அணி 34.1 ஓவர்களில் 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அயர்லாந்து அணி தரப்பில் பாரி மெக்கார்த்தி 4, ஜார்ஜ் டாக்ரெல் 3 விக்கெட்களை வீழ்த்தினர். 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் நாளை (23-ம் தேதி) பிற்பகல் 3.15 மணிக்கு நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top