மழையால் வெளியேறியது சன்ரைசர்ஸ்

கம்மின்ஸ் கலக்கல் வீண் * அதிர்ஷ்டம் டிசி பக்கம்

ஹைதராபாத்: ஐபிஎல் 18வது சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய  55வது லீக் ஆட்டம் கனமழையால் முடிவு இல்லாத போட்டியாக கைவிடப்பட்டது. இரு அணிகளும் தலா 1 புள்ளி பெற்ற நிலையில், எஸ்ஆர்எச் அணி ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பை பறிகொடுத்தது.

abandoned due to rain

ராஜிவ் காந்தி அரங்கில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தார். கருண் நாயர் (0), டு பிளெஸ்ஸி (3), அபிஷேக் போரெல் (8) ஆகியோர் கம்மின்ஸ் வேகத்தில் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் வசம் கேட்ச் கொடுத்து வெளியேற, டிசி 15 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது.

கேப்டன் அக்சர் படேல் 6, கே.எல்.ராகுல் 10 ரன்னில் பெவிலியன் திரும்ப… டெல்லி 7.1 ஓவரில் 29 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து மேலும் சரிவை சந்தித்தது. ஓரளவு தாக்குப்பிடித்த விப்ராஜ் நிகம் 18 ரன் எடுத்து ரன் அவுட்டானார்.

டிரிஸ்டன் ஸ்டப்ஸ் – அஷுதோஷ் ஷர்மா ஜோடி 7வது விக்கெட்டுக்கு 66 ரன் சேர்க்க டெல்லி கேப்பிடல்ஸ் கவுரவமான ஸ்கோரை எட்டியது. அஷுதோஷ் 41 ரன் (26 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி இஷான் மலிங்கா பந்துவீச்சில் மனோகரிடம் பிடிபட்டார்.

டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்தது. ஸ்டப்ஸ் 41 ரன் (36 பந்து, 4 பவுண்டரி), ஸ்டார்க் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சன்ரைசர்ஸ் பந்துவீச்சில் கம்மின்ஸ் 3, உனத்கட், ஹர்ஷல், மலிங்கா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

pat cummins

இடைவேளையின்போது கனமழை கொட்டியதால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இன்னிங்ஸ் தொடங்குவதில் தாமதமானது. மழை நின்றாலும், மைதானம் ஈரமாக இருந்ததால் ஆட்டம் நடப்பதற்கான சாத்தியம் இல்லை என முடிவு செய்த நடுவர்கள் ‘முடிவு இல்லாத’ போட்டியாக அறிவித்தனர்.

இதையடுத்து, இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக தோல்வியில் இருந்து தப்பிய டெல்லி அணி 11 போட்டியில் 13 புள்ளிகளுடன் வாய்ப்பை தக்கவைத்த நிலையில், சன்ரைசர்ஸ் ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பை பறிகொடுத்து பரிதாபமாக வெளியேறியது (11 போட்டியில் 7 புள்ளி).

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top