கேப்டன் பராக் அதிரடி வீண் * ரஸ்ஸல் ஆட்ட நாயகன் * வாய்ப்பில் நீடிக்கிறது கேகேஆர்
கொல்கத்தா: நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில், 207 ரன் என்ற இமாலய இலக்கை துரத்திய ஆர்ஆர் அணி (ராஜஸ்தான் ராயல்ஸ்) துரதிர்ஷ்டவசமாக 1 ரன் வித்தியாசத்தில் வெற்றியை கோட்டைவிட்டது.

ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன் குவித்தது. குர்பாஸ் 35 ரன் (25 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), சுனில் நரைன் 11, கேப்டன் ரகானே 30 ரன் (24 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), ரகுவன்ஷி 44 ரன் (31 பந்து, 5 பவுண்டரி) விளாசி விக்கெட்டை இழந்தனர்.
கடைசி கட்டத்தில் பவுண்டரி, சிக்சராகப் பறக்கவிட்டு மிரட்டிய ஆந்த்ரே ரஸ்ஸல் 57 ரன் (25 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்), ரிங்கு சிங் 19 ரன்னுடன் (6 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராயல்ஸ் பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர், யுத்வீர் சிங், தீக்ஷனா, ரியான் பராக் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 207 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமாக இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி (4), குணால் சிங் ரத்தோர் (0) அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.
யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – கேப்டன் பராக் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 58 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். ஜெய்ஸ்வால் 34 ரன் (21 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி மொயீன் அலி சுழலில் ரிங்கு சிங் வசம் பிடிபட்டார்.
அடுத்து வந்த துருவ் ஜுரெல், வனிந்து ஹசரங்கா இருவரும் வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் அடுத்தடுத்து டக் அவுட்டாக, ஆர்ஆர் அணி 7.5 ஓவரில் 71 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து மீண்டும் திணறியது. இந்த நிலையில் பராக் – ஹெட்மயர் ஜோடி அதிரடியில் இறங்க… ராயல்ஸ் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
இவர்களைப் பிரிக்க முடியாமல் கேகேஆர் பவுலர்கள் விழி பிதுங்கினர். ஹெட்மயர் 29 ரன் (23 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்), பராக் 95 ரன் (45 பந்து, 6 பவுண்டரி, 8 சிக்சர்) விளாசி ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, கேகேஆர் கை ஓங்கியது. ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக 6 பந்துகளிலும் சிக்சர் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை வசப்படுத்திய பராக், சதமடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

ஆனாலும், ஷுபம் துபே – ஜோப்ரா ஆர்ச்சர் உறுதியுடன் போராட… வெற்றி யாருக்கு என்பதில் கடைசி வரை ஊசலாட்டம் நிலவியது. கடைசி 6 பந்தில் 22 ரன் தேவை என்ற நிலையில் அரோரா வீசிய 3வது, 4வது, 5வது பந்துகளை துபே 6, 4, 6 ஆக விளாசி கேகேஆர் தரப்புக்கு மரண பயத்தை காட்டினார். கடைசி பந்தில் 3 ரன் தேவைப்பட… ஒரு ரன்னை பூர்த்தி செய்த துபே 2வது ரன்னுக்கு ஓடும்போது ரிங்கு சிங்கின் துல்லியமான த்ரோவை பிடித்த அரோரா, ஆர்ச்சரை (8 பந்தில் 12 ரன்) ரன் அவுட்டாக்க… ஆர்ஆர் அணி வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
ஷுபம் துபே 25 ரன்னுடன் (14 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா பந்துவீச்சில் மொயீன் அலி, வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட், வைபவ் அரோரா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆந்த்ரே ரஸ்ஸல் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
நடப்பு சீசனில் 4 முறை நூலிழையில் வெற்றியை கோட்டைவிட்ட ஆர்ஆர் அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை பறிகொடுத்த நிலையில், நடப்பு சாம்பியன் கேகேஆர் தொடர்ந்து நம்பிக்கையுடன் நடைபோடுகிறது.