KKR 2

சுனில் நரைன் அசத்தலில் கொல்கத்தா த்ரில் வெற்றி

டெல்லி: ஐபிஎல் 18வது சீசன் 48வது லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்ட நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆல்ரவுண்டர் சுனில் நரைன் அசத்தலில் 14 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

KKR 2

அருண் ஜெட்லி அரங்கில் நடந்த இப்போட்டியில், டாஸ்  வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் பந்துவீச… கேகேஆர் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 204 ரன் குவித்தது. குர்பாஸ் 26 ரன் (12 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), சுனில் நரைன் 27 ரன் (16 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்),கேப்டன் ரகானே 26 ரன் (14 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), ரகுவன்ஷி 44 ரன் (32 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), ரிங்கு சிங் 36 ரன் (25 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), ரஸ்ஸல் 17 ரன் (9 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினர்.

கேப்பிடல்ஸ் பந்துவீச்சில் ஸ்டார்க் 3, விப்ராஜ் நிகம், அக்சர் படேல் தலா 2 விக்கெட், சமீரா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 205 ரன் என்ற கடினமான இலக்கை துரத்திய டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன் மட்டுமே எடுத்து 14 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

டு பிளெஸ்ஸி அதிகபட்சமாக 62 ரன் (45 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் அக்சர் படேல் 43 ரன் (23 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), விப்ராஜ் நிகம் 38 ரன் (19 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாச, மற்ற வீரர்கள் பெரிதாகக் கை கொடுக்கவில்லை. கடைசி ஓவரில் 25 ரன் தேவைப்பட்ட நிலையில், ரஸ்ஸல் வீசிய அந்த ஓவரில் 10 ரன் மட்டுமே கிடைத்ததுடன் 5வது பந்தில் நிகல் விக்கெட்டையும் டிசி பறிகொடுத்தது.

Sunil Narine 4

கேகேஆர் பந்துவீச்சில் சுனில் நரைன் 4 ஓவரில் 29 ரன்னுக்கு 3 விக்கெட் கைப்பற்றினார். வருண் சக்ரவர்த்தி 2, அனுகுல் ராய், வைபவ் அரோரா, ரஸ்ஸல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 27 ரன் விளாசியதுடன் டு பிளெஸ்ஸி, அக்சர், ஸ்டப்ஸ் என 3 முக்கிய விக்கெட், கே.எல்.ராகுலை ரன் அவுட் செய்தது, ஒரு கேட்ச் என ஆல்ரவுண்டராக அசத்திய சுனில் நரைன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

டெல்லியில் விளையாடிய 4 போட்டிகளில் கேப்பிடல்ஸ் 3வது தோல்வியைத் தழுவியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top