கோஹ்லி – படிக்கல் ஜோடி அமர்க்களம்
முல்லன்பூர்: பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், விராத் கோஹ்லி – தேவ்தத் படிக்கல் ஜோடியின் அபார ஆட்டத்தால் ஆர்சிபி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

மகாராஜா யாதவிந்த்ரா சிங் சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீச… பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன் சேர்த்தது. பிரப்சிம்ரன் 33 ரன் (17 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), ஜோஷ் இங்லிஸ் 29 ரன் (17 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), பிரியன்ஷ் ஆர்யா 22 ரன் (15 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் ஷ்ரேயாஸ் 6, நெஹல் வதேரா 5, ஸ்டாய்னிஸ் 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
ஷஷாங்க் சிங் 31 ரன் (33 பந்து, 1 பவுண்டரி), மார்கோ யான்சென் 25 ரன்னுடன் (20 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். பெங்களூரு பந்துவீச்சில் க்ருணால் பாண்டியா, சுயாஷ் ஷர்மா தலா 2, ரொமாரியோ ஷெப்பர்ட் 1 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி, ஃபில் சால்ட் 1 ரன்னில் அவுட்டாக… அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது. எனினும், விராத் கோஹ்லி – தேவ்தத் படிக்கல் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 103 ரன் சேர்க்க… ஆர்சிபி வெற்றி நடை போட்டது.

படிக்கல் 61 ரன் (35 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் ரஜத் பத்திதார் 12 ரன்னில் பெவிலியன் திரும்பினர். ராயல்ல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
கோஹ்லி 73 ரன் (54 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), ஜிதேஷ் ஷர்மா 11 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் பந்துவீச்சில் அர்ஷ்தீப், ஹர்பிரீத், சாஹல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஐபிஎல் தொடரில் தனது 67வது அரை சதத்தை பதிவு செய்து டேவிட் வார்னரின் சாதனையை தகர்த்த கோஹ்லி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.