ஆல் ரவுண்டர் ஜாக்ஸ் ஆட்ட நாயகன்
மும்பை: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
வாங்கடே மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற எம்ஐ கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். அபிஷேக் ஷர்மா – டிராவிஸ் ஹெட் இணைந்து சன்ரைசர்ஸ் இன்னிங்சை தொடங்கினர். ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் வழக்கமான அதிரடியை வெளிப்படுத்த முடியாவிட்டாலும், இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7.3 ஓவரில் 59 ரன் சேர்த்து ஓரளவு நல்ல தொடக்கத்தையே கொடுத்தது.

அபிஷேக் 40 ரன் (28 பந்து, 7 பவுண்டரி), இஷான் கிஷன் 2 ரன்னில் பெவிலியன் திரும்ப, ஹெட் 28 ரன் எடுத்து (29 பந்து, 3 பவுண்டரி) ஜாக்ஸ் பந்துவீச்சில் சாண்ட்னர் வசம் பிடிபட்டார். நிதிஷ் குமார் 19 ரன் எடுத்து போல்ட் வேகத்தில் திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
17 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 115 ரன் மட்டுமே எடுத்திருந்த ஐதராபாத் அணிக்கு அடுத்த ஓவர் ஜாக்பாட்டாக அமைந்தது. தீபக் சாஹர் வீசிய அந்த ஓவரில் கிளாசன் 6, 4, 4, 6, 1 என மொத்தம் 21 ரன் விளாசினார்.
எனினும், பும்ரா வீசிய 19வது ஓவரின் முதல் பந்தில் கிளாசன் (37 ரன், 28 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேற, அந்த ஓவரில் 4 ரன் மட்டுமே கிடைத்தது. மும்பை கேப்டன் ஹர்திக் வீசிய கடைசி ஓவர் மீண்டும் ஐதராபாத்துக்கு சாதகமாக அமைந்தது.
அந்த ஓவரில் அனிகேத் வர்மா 2 சிக்சர், கேப்டன் கம்மின்ஸ் 1 சிக்சர் உள்பட 22 ரன் கிடைக்க, சன்ரைசர்ஸ் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன் குவித்தது. அனிகேத் 18 ரன், கம்மின்ஸ் 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பந்துவீச்சில் வில் ஜாக்ஸ் 3 ஓவரில் 14 ரன்னுக்கு 2 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா, போல்ட், ஹர்திக் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
ஹர்திக் 4 ஓவரில் 42 ரன் விட்டுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, 20 ஓவரில் 163 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் 16 பந்தில் 26 ரன் விளாசி (3 சிக்சர்) அதிரடி தொடக்கத்தை கொடுத்தார். அவர் வாங்கடே மைதானத்தில் விளையாடிய ஐபிஎல் ஆட்டங்களில் 100 சிக்சர் என்ற சாதனை மைல்கல்லை எட்டி அசத்தினார்.

ரிக்கெல்டன் 31 ரன்னில் (23 பந்து, 5 பவுண்டரி) வெளியேற… சூரியகுமார் 28 ரன் (15 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), வில் ஜாக்ஸ் 36 ரன் (26 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி கம்மின்ஸ் வேகத்தில் ஜீஷன் அன்சாரியிடம் பிடிபட்டனர்.
அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால் சன்ரைசர்ஸ் தரப்பு உற்சாகம் அடைந்தாலும், அடுத்து வந்த திலக் வர்மா – ஹர்திக் பாண்டியா ஜோடி அதிரடியாக 17 பந்தில் 34 ரன் சேர்க்க, மும்பை வெற்றி உறுதியானது. ஹர்திக் 21 ரன் (9 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), நமன் திர் (0) இருவரும் இஷான் மலிங்கா பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினாலும், மும்பை அணி 18.1 ஓவரிலேயே 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
திலக் வர்மா 21 ரன் (17 பந்து, 2 பவுண்டரி), மிட்செல் சாண்ட்னர் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஐதராபாத் பந்துவீச்சில் கேப்டன் கம்மின்ஸ் 3, மலிங்கா 2, ஹர்ஷல் படேல் 1 விக்கெட் வீழ்த்தினர். ஆல் ரவுண்டராக அசத்திய வில் ஜாக்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த போட்டியின் முடிவு புள்ளிப் பட்டியலில் எந்த மாற்றத்தையும் நிகழ்த்தவில்லை.