சாஹல் சுழலில் மூழ்கியது ரைடர்ஸ்
முல்லன்பூர்: பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில் 112 ரன் என்ற எளிய இலக்கை துரத்திய நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 95 ரன்னில் சுருண்டு 16 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

மகாராஜா யாதவிந்த்ரா சிங் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 15.3 ஓவரில் 111 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. தொடக்க வீரர்கள் பிரியன்ஷ் ஆர்யா 22 ரன் (12 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), பிரப்சிம்ரன் சிங் 30 ரன் (15 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) விளாச… ஷஷாங்க் சிங் 18, ஜேவியர் பார்ட்லெட் 11, நெஹல் வதேரா 10 ரன் எடுத்தனர்.
கேப்டன் ஷ்ரேயாஸ் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். கொல்கத்தா பந்துவீச்சில் ஹர்ஷித் ராணா 3, வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன் தலா 2, வைபவ் அரோரா, அன்ரிச் நோர்க்யா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 112 ரன் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை நோக்கி நைட் ரைடர்ஸ் களமிறங்கியது. தொடக்க வீரர்கள் டி காக் 2, நரைன் 5 ரன்னில் வெளியேற, கேப்டன் ரகானே – ரகுவன்ஷி ஜோடி 3வது விக்கெட்டுக்கு 55 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தது.
ரகானே 17 ரன், ரகுவன்ஷி 37 ரன் எடுத்து சாஹல் சுழலில் விக்கெட்டை பறிகொடுக்க, சக வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். ஓவருக்கு 3 ரன் எடுத்தால் கூட போதும் என்ற நிலையில் கை வசம் விக்கெட் இல்லாததால் நைட் ரைடர்ஸ் செய்வதறியாது திகைத்தது.

கடைசி நம்பிக்கையாக களத்தில் இருந்த ஆந்த்ரே ரஸ்ஸல் 17 ரன் (11 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி மார்கோ யான்சென் வேகத்தில் கிளீன் போல்டாக,, கொல்கத்தா அணி 15.1 ஓவரில் 95 ரன் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. அன்ரிச் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பஞ்சாப் பந்துவீச்சில் சாஹல் 4 ஓவரில் 28 ரன்னுக்கு 4 விக்கெட் கைப்பற்றி ஆட்ட நாயகனாக ஜொலித்தார். யான்சென் 3, பார்ட்லெட், அர்ஷ்தீப், மேக்ஸ்ஸ்வெல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். கடைசி வரை திகில் கிளப்பிய இந்த போட்டியில் 16 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை வசப்படுத்திய பஞ்சாப் 4வது இடத்துக்கு முன்னேறியது.