Varun Chakravarthy 2 scaled

டி காக் விளாசலில் கேகேஆர் வெற்றி

வருண், மொயீன் சுழலில் அசத்தல்

கவுகாத்தி: ஐபிஎல் தொடரின் 6வது லீக் ஆட்டத்தில், குயிண்டன் டி காக் அதிரடி ஆட்டத்தால் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.

பர்சபாரா கிரிக்கெட் அரங்கில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு செய்தது. அந்த அணியில் சுனில் நரைன் உடல்நலக் குறைவு காரணமாக ஓய்வெடுக்க, அவருக்கு பதிலாக மொயீன் அலி சேர்க்கப்பட்டார்.

Quinton De Kock

ராயல்ஸ் தொடக்க வீரர்களாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் களமிறங்கினர். சாம்சன் 13 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த கேப்டன் ரியான் பராக் 25 ரன் (15 பந்து, 3 சிக்சர்) விளாசி வருண் சுழலில் விக்கெட் கீப்பர் டி காக் வசம் பிடிபட்டார். ஜெய்ஸ்வால் 29 ரன் (24 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), வனிந்து ஹசரங்கா 4, நிதிஷ் ராணா 8, ஷுபம் துபே 9 ரன்னில் அணிவகுத்தனர்.

அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால் திணறிய ராஜஸ்தான் அணிக்கு துருவ் ஜுரெல் 33 ரன் (28 பந்து, 5 பவுண்டரி) எடுத்து கவுரவமான ஸ்கோரை எட்ட உதவினார். ஹெட்மயர் 7, ஜோப்ரா ஆர்ச்சர் 16 ரன் (7 பந்து, 2 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்ப, ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 151 ரன் எடுத்தது.

தீக்‌ஷனா 1, துஷார் தேஷ்பாண்டே 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கேகேஆர் பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி, மொயீன் அலி, ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா தலா 2 விக்கெட், ஸ்பென்சர் ஜான்சன் 1 விக்கெட் கைப்பற்றினர்.

Varun Chakravarthy 2

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 152 ரன் எடுத்தால் வெற்றி என்ற சற்றே எளிய இலக்குடன் களமிறங்கியது கொல்கத்தா அணி. மொயீன் அலி 5 ரன் எடுத்து ரன் அவுட்டாக, கேப்டன் ரகானே 18 ரன்னில் (15 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) விக்கெட்டை பறிகொடுத்தார்.

எனினும், டி காக் – அங்க்ரிஷ் ரகுவன்ஷி ஜோடி 3வது விக்கெட்டுக்கு உறுதியுடன் விளையாடி வெற்றியை வசப்படுத்தியது. கொல்கத்தா அணி 17.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை ருசித்தது. 8 பவுண்டரி, 6 சிக்சரை பறக்கவிட்டு ராயல்ஸ் பந்துவீச்சை தவிடுபொடியாக்கிய டிகாக் 97 ரன் (61 பந்து), ரகுவன்ஷி 22 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆர்ச்சர் வேகம் இந்த போட்டியிலும் சுத்தமாக எடுபடவில்லை. அவர் 2.3 ஓவரில் 33 ரன் விட்டுக்கொடுத்தார். ராயல்ஸ் தொடர்ச்சியாக 2வது தோல்வியை சந்தித்து 10வது இடத்தில் உள்ளது. டி காக் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். கேகேஆர் 2 புள்ளிகள் பெற்றது. ஹைதராபாத்தில் நடக்கும் 7வது லீக் ஆட்டத்தில் (மார்ச் 27) சன்ரைசர்ஸ் – லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top