தொடர்ச்சியாக 4வது தோல்வி!
ஹைதராபாத்: குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தொடர்ச்சியாக 4வது தோல்வியை சந்தித்தது.
உப்பல், ராஜிவ் காந்தி அரங்கில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் கில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். சன்ரைசர்ஸ் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் 8, அபிஷேக் ஷர்மா 18 ரன் எடுத்து முகமது சிராஜ் வேகத்தில் வெளியேற, அந்த அணி அதிர்ச்சியில் உறைந்தது.

அடுத்து வந்த இஷான் கிஷன் 17, கிளாசன் 27, நிதிஷ் குமார் 31, கமிந்து மெண்டிஸ் 1, அனிகேத் வர்மா 18 ரன்னில் வெளியேற சிமர்ஜீத் சிங் டக் அவுட்டானார். சன்ரைசர்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்தது. கேப்டன் கம்மின்ஸ் 22 ரன் (9 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), முகமது ஷமி 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்து அசத்தினார் சிராஜ் (4-0-17-4). பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியும் தொடக்கத்தில் சாய் சுதர்சன் (5 ரன்), ஜோஸ் பட்லர் (0) விக்கெட்டை இழந்து தடுமாறினாலும், கேப்டன் கில் – வாஷிங்டன் சுந்தர் இணை 3வது விக்கெட்டுக்கு உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்த தலை நிமிர்ந்தது.
இருவரும் 90 ரன் சேர்த்து அசத்தினர். வாஷிங்டன் 49 ரன் (29 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஷமி வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த ஷெர்பேன் ரூதர்போர்டும் அதிரடியில் இறங்க, குஜராத் டைட்டன்ஸ் 16.4 ஓவரிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

கில் 61 ரன் (43 பந்து, 9 பவுண்டரி), ரூதர்போர்டு 35 ரன்னுடன் (16 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஹைதராபாத் பந்துவீச்சில் ஷமி 2, கம்மின்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்திய ஜிடி 6 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறியது. பந்துவீச்சில் கலக்கிய சிராஜ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
5 போட்டியில் 4வது தோல்வியை சந்தித்த எஸ்ஆர்எச் கடைசி இடத்தில் நீடிக்கிறது. வாங்கடே மைதானத்தில் நடக்கும் 20வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.