பெரிய இலக்கை துரத்த முடியல..பிளெம்மிங் புலம்பல்

சென்னை

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ். இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி அணி கே.எல்.ராகுலின் அதிரடியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது.

கே.எல்.ராகுல் 51 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் விளாசினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய அபிஷேக் போரெல் 20 பந்துகளில் 33 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 12 பந்துகளில் 24 ரன்களும் விளாசினர். 184 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக விஜய் சங்கர் 54 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 69 ரன்களும், தோனி 26 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 30 ரன்களும் சேர்த்தனர். சேப்பாக்கம் மைதானத்தில் 2010ம் ஆண்டுக்கு பின்னர் தற்போதுதான் சிஎஸ்கே அணியை டெல்லி அணி வீழ்த்தியுள்ளது.

போட்டிக்கு பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் கூறும்போது, “எங்களுக்கு இந்த பேட்டிங் ஆர்டரின் மீது இன்னும் கொஞ்சம் நம்பிக்கை இருக்கிறது. டாப் ஆர்டரில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்காகத்தான் டெவன் கான்வேயை கொண்டு வந்தோம். ஆனால், அதுவும் சிறந்த பலனை கொடுக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட இலக்கிற்கு மேல் எங்களால் எட்ட முடியவில்லை. இது பிரச்சினைதான்.

பந்து வீச்சை கொண்டும் எதிரணியை குறைந்த ரன்களுக்குள் மடக்க நினைக்கிறோம். அதற்கும் வழியில்லை. தோனியின் ஓய்வு பற்றி எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. அவருடன் பணி செய்வதை அனுபவித்து மகிழ்கிறேன். அவர் இன்னும் வலுவாகத்தான் விளையாடிக்கொண்டிருக்கிறார். ஓய்வு பற்றி நீங்கள்தான் அவரிடம்தான் கேட்க வேண்டும்”என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top