நைட் ரைடர்ஸ் போராட்டம் வீண்
கொல்கத்தா: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெறும் 4 ரன் வித்தியாசத்தில் போராடித் தோற்றது.

ஈடன் கார்டனில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் முதலில் பந்துவீச, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 238 ரன் குவித்தது. எய்டன் மார்க்ரம் 47 ரன் (28 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), மிட்செல் மார்ஷ் 81 ரன் (48 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்), நிகோலஸ் பூரன் ஆட்டமிழக்காமல் 87 ரன் (36 பந்து, 7 பவுண்டரி, 8 சிக்சர்) விளாசினர்.
கொல்கத்தா பந்துவீச்சில் ஹர்ஷித் ராணா 2, ஆந்த்ரே ரஸ்ஸல் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து இமாலய இலக்கை துரத்திய நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன் எடுத்து வெறும் 4 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
டி காக் 15, சுனில் நரைன் 30, கேப்டன் அஜிங்க்யா ரகானே 61 ரன் (35 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), வெங்கடேஷ் அய்யர் 45 ரன் (29 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். ரமன்தீப் 2, ரகுவன்ஷி 5, ரஸ்ஸல் 7 ரன்னில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது கொல்கத்தா அணிக்கு பின்னடைவை கொடுத்தது.

கடைசி கட்டத்தில் கடுமையாகப் போராடிய ரிங்கு சிங் 38 ரன் (15 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), ஹர்ஷித் ராணா 10 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். லக்னோ பந்துவீச்சில் ஆகாஷ் தீப்,ஷர்துல் தாகூர் தலா 2, ஆவேஷ் கான், திக்வேஷ், பிஷ்னோய் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். ஷர்துல் வீசிய 13வது ஓவரில் தொடர்ச்சியாக 5 வைடு பந்துகளை வீசியது ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையாக பதிவானது.
4 ரன்னில் த்ரில் வெற்றியை ருசித்த லக்னோ 2 புள்ளிகளை தட்டிச் சென்றது. அந்த அணியின் நிகோலஸ் பூரன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.