ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 207 ரன்கள் வித்தியாசத்தில் ஒடிசா அணியை வென்றது.
புவனேஸ்வரில் உள்ள கேஐஐடி மைதானத்தில் இந்த ஆட்டம் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 286 ரன்களும், ஒடிசா அணி 148 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தன.
2-வது இன்னிங்ஸில் தமிழக அணி 316 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதையடுத்து 455 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஒடிசா அணி 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தின்போது அந்த அணி 83.5 ஓவர்களில் 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் சுப்ரான்ஷு சேனாபதி 98, அனில் பரிதா 98 ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து தமிழக அணி 207 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிழக அணி தரப்பில் சோனு யாதவ், வித்யுத், சாய் கிஷோர், நிதிஷ் ராஜகோபால் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.
ஆட்டநாயகனாக தமிழக வீரர் சோனு யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.

