WTC

டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா சாம்பியன்

27 வருடங்களுக்குப் பிறகு சாதனை படைத்து அசத்தல்

லார்ட்ஸ்

ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது தென் ஆப்பிரிக்க அணி.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பியூ வெப்ஸ்டர் 72, ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி சார்பில் காகிசோ ரபாடா 5, மார்கோ யான்சன் 3 விக்கெட்கள் வீழ்த்தினர். தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 57.1 ஓவர்களில் 138 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டேவிட் பெடிங்ஹாம் 45, கேப்டன் தெம்பா பவுமா 36 ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் பாட் கம்மின்ஸ் 6, மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

74 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 65 ஓவர்களில் 207 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 58, அலெக்ஸ் கேரி 43 ரன்கள் சேர்த்தனர். 283 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 56 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. தனது 8-வது சதத்தை விளாசிய எய்டன் மார்க்ரம் 102 ரன்களும், 25-வது அரை சதத்தை கடந்த கேப்டன் தெம்பா பவுமா 65 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

SA

வெற்றிக்கு மேற்கொண்டு 69 ரன்கள் தேவை என்ற நிலையில் நேற்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 83.4 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. தெம்பா பவுமா 134 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்த நிலையில் பாட் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். மார்க்ரம் 207 பந்துகளில், 14 பவுண்டரிகளுடன் 136 ரன்கள் விளாசிய நிலையில் ஜோஷ் ஹேசில்வுட் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 147 ரன்கள் சேர்த்தது.

டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 43 பந்துகளில், 8 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்தில் போல்டனார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்கள் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக எய்டன் மார்க்ரம் தேர்வானார். ஐசிசி தொடர்களில் தென் ஆப்பிரிக்க அணி 27 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் பட்டம் வென்றுள்ளது.

அந்த அணி கடைசியாக 1998-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கோப்பையை வென்றிருந்தது. இந்த 27 வருட காலங்களில் பல ஐசிசி தொடர்களில் தென் ஆப்பிரிக்க அணி நாக் அவுட் சுற்றுகளில் பரிதாபமாக தோல்வியை சந்தித்து வெளியேறி உள்ளது. கடைசியாக கடந்த ஆண்டு டி 20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி, இந்தியாவிடம் தோல்வி அடைந்திருந்தது.

ஐசிசி தொடர்களில் முக்கியமான கட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி தோல்வியை சந்தித்து வெளியேறுவதால் அந்த அணி மீது ‘சோக்கர்ஸ்’ என்ற முத்திரை குத்தப்பட்டது. கால் நூற்றாண்டை கடந்து இந்த முத்திரையை தற்போது தெம்பா பவுமா தலைமையிலான போராட்ட குணம் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி உடைத்தெறிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top