சென்னை
இந்தியன் ஆயில் வழங்கும் WTT ஸ்டார் கன்டென்டர் சென்னை 2025 நிகழ்வு சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரை இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் கீழ் உள்ள ஸ்டூபா ஸ்போர்ட்ஸ் அனலிட்டிக்ஸ் மற்றும் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. உலகின் சிறந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ளும் இந்த தொடரில் 600 புள்ளிகள் வழங்கப்பட உள்ளன. மேலும் இந்தத் தொடரின் மொத்த பரிசு தொகை ரூ.2.35 கோடியாகும்.
இந்தியன் ஆயில் வழங்கும் WTT ஸ்டார் கன்டென்டர் சென்னை 2025 நிகழ்வின் 3-வது நாளான இன்று ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 5 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய நட்சத்திரமான சரத் கமல், போட்டித் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் நிக்கோலஸ் லம்மை எதிர்த்து விளையாடினார். இதில் 42 வயதான சரத் கமல் தன்னைவிட 23 வயது குறைவான நிக்கோலஸ் லம்பை 3-0 (11-8, 11-8, 11-9) என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் மானவ் தாக்கர் 3-1 (11-4, 7-11, 11-5, 11-8) என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஃபின் லூவை வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் கால்பதித்தார். 8-ம் நிலை வீரரான ஜப்பானின் சோரா மட்சுஷிமா 3-1 (11-5, 11-1, 10-12, 11-7) என்ற செட் கணக்கில் தகுதி நிலை வீரரான இந்தியாவின் பயாஸ் ஜெயினை தோற்கடித்தார். நைஜீரியாவின் குவாட்ரி அருணா 0-3 (11-13, 8-11, 8-11) என்ற செட் கணக்கில் சீன தைபேவின் பெங் யி ஷின்னிடம் தோல்வி அடைந்தார்.
மற்ற ஆட்டங்களில் எகிப்தின் ஓமர் அஸார், ஜெர்மனியின் ஆண்ட்ரே பெர்டெல்ஸ்மியர், பிரான்ஸின் ஃபிளேவியன் காட்டன், குரோஷியாவின் டொமிஸ்லாவ் புக்கார் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் போட்டித் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இந்தியாவின் மியூ கிகரா 3-0 (11-3, 11-9, 11-5) என்ற நேர் செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த தகுதி நிலை வீராங்கனையான காவ்யா பாத்தை வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். அதேவேளையில் போட்டித் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள இந்தியாவின் மணிகா பத்ரா 1-3 (7-11, 10-12, 11-7, 9-11) என்ற கணக்கில் சீன தைபேவின் ஹுவாங் யூ ஜீ-விடம் தோல்வி அடைந்தார்.
மற்றொரு இந்திய நட்சத்திரமான அய்ஹிகா முகர்ஜி 0-3 (14-16, 4-11, 5-11) என்ற செட் கணக்கில் கொரியாவின் ஜூ சியோன்ஹுயிடம் வீழ்ந்தார். 4-ம் நிலை வீராங்கனையான கொரியாவின் ஷின் யு பின் 3-1 (11-13, 11-4, 11-7, 12-10) என்ற செட் கணக்கில் தகுதி நிலை வீராங்கனையான இந்தியாவின் திவ்யான்ஷி பவுமிக்கையும், 6-ம் நிலை வீராங்கனையான பியூர்டோ ரிகோவின் அட்ரியானா டயஸ் 3-0 (11-7, 11-9, 11-6) என்ற நேர் செட் கணக்கில் தகுதி நிலை வீராங்கனையான இந்தியாவின் சிண்ட்ரெல்லா தாஸையும் வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.
3-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் சட்சுகி ஒடோ 3-2 (11-3, 4-11, 11-7, 10-12, 11-9) என்ற செட் கணக்கில் சிங்கப்பூரின் ஜெங் ஜியானையும், 16-ம் நிலை வீராங்கனையான கொரியாவின் லீ யூன்-ஹே 3-2 12-10, 5-11, 9-11, 11-4, 11-9 என்ற செட் கணக்கில் இத்தாலியின் டெபோரா விவரெல்லியையும், கொரியாவின் கிம் நா-யோங் 3-2 (10-12, 11-7, 11-5, 3-11, 11-6) என்ற செட் கணக்கில் ஹாங் காங்கின் டூ ஹோய் கெம்மையும் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
கலப்பு இரட்டையர் அரை இறுதி சுற்றில் 4-ம் நிலை ஜோடியான இந்தியாவின் மனுஷ் ஷா, தியா சித்தலே ஜோடி 0-3 (7-11, 9-11, 3-11) என்ற செட் கணக்கில் கொரியாவின் லிம் ஜாங் ஹூன், ஷின் யு பின் ஜோடியிடம் தோல்வி அடைந்தது. மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் ஜப்பானின் மகரு யோஷிமுரா, சட்சுகி ஓடோ ஜோடி 3-2 (11-4, 11-2, 6-11, 5-11, 11-7) என்ற செட் கணக்கில் ஹாங் காங்கின் வோங் சுன் டிங், டூ ஹோய் கெம் ஜோடியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஆடவருக்கான இரட்டையர் பிரிவு அரை இறுதி சுற்றில் வைல்டு கார்டு ஜோடியான இந்தியாவின் சரத் கமல், சினேஹித் சுரவஜ்ஜுலா ஜோடி 1-3 (11-9, 8-11, 9-11, 6-11) என்ற செட் கணக்கில் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள கொரியாவின் லிம் ஜொங்-ஹூன், ஆன் ஜே-ஹியூன் ஜோடியிடம் போராடிதோல்வி அடைந்தது.
