Archer

ராயல்சிடம் பணிந்தது பஞ்சாப்

ஜெய்ஸ்வால், ஆர்ச்சர் அசத்தல்

முல்லன்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணி 50 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

மகாராஜா யாதவிந்த்ரா சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்துவீச முடிவு செய்தார். காயம் காரணமாக ஓய்வெடுத்து வந்த சஞ்சு சாம்சன், மீண்டும் ராயல்ஸ் கேப்டனாக பொறுப்பேற்றதுடன் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து இன்னிங்சை தொடங்கினார்.

jaiswal samson

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.2 ஓவரில் 89 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. சாம்சன் 38 ரன் (26 பந்து, 6 பவுண்டரி), ஜெய்ஸ்வால் 67 ரன் (45 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி பெர்குசன் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

அடுத்து வந்தவர்களில் ரியான் பராக் ஒரு முனையில் அதிரடி காட்ட… நிதிஷ் ராணா 12, ஹெட்மயர் 20 ரன்னில் பெவிலியன் திரும்பினர். ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 205 ரன் குவித்தது. பராக் 43 ரன் (25 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), துருவ் ஜுரெல் 13 ரன்னுடன் (5 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சில் பெர்குசன் 2, யான்சென், அர்ஷ்தீப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, பஞ்சாப் 20 ஓவரில் 206 ரன் என்ற கடின இலக்கை துரத்தியது. ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் பிரியன்ஷ் ஆர்யா (0), கடைசி பந்தில் கேப்டன் ஷ்ரேயாஸ் (10 ரன்) கிளீன் போல்டாகி வெளியேற… பஞ்சாப் 11/2 என திகைப்பில் ஆழ்ந்தது.

Archer

அதில் இருந்து மீளும் முன்பாகவே ஸ்டாய்னிஸ் 1, பிரப்சிம்ரன் 17 ரன்னில் அவுட்டாகி நிலைமையை இன்னும் மோசமாக்கினர். இந்த நிலையில் நெஹல் வதேரா – கிளென் மேக்ஸ்வெல் ஜோடி உறுதியுடன் போராட… பஞ்சாப் தரப்புக்கு நம்பிக்கை துளிர்த்தது.

இருவரும் 5வது விக்கெட்டுக்கு 88 ரன் சேர்த்து ராயல்ஸ் வயிற்றில் புளியைக் கரைத்தனர்!. மேக்ஸ்வெல் 30 ரன் (21 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), வதேரா 62 ரன் (41 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி அடுத்தடுத்து ஆட்டமிழந்தது பஞ்சாப் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுக்க, பஞ்சாப் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன் மட்டுமே எடுத்து 50 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

ஷஷாங்க் சிங் 10, பெர்குசன் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராயல்ஸ் பந்துவீச்சில் ஆர்ச்சர் 4 ஓவரில் 25 ரன்னுக்கு 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். சந்தீப், தீக்‌ஷனா தலா 2, கார்த்திகேயா, ஹசரங்கா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

ஆர்ச்சர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஹைதராபாத்தில் நடக்கும் 19வது லீக் ஆட்டத்தில் (ஏப்.6) சன்ரைசர்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top