17ஆண்டுகளாக துரத்தும் துரதிருஷ்டம்
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் துரதிருஷ்ட அணி தென்ஆப்பிரிக்கா என்றால், ஐபிஎல் டி 20 கிரிக்கெட் வரலாற்றில் அந்த துரதிருஷ்டம் பின்தொடர்வது உலகின் நம்பர் 1 வீரர் விராட் கோஹ்லி இடம் பெற்றுள்ள ஆர்சிபி, அதாங்க நம்ம ராயல் சேலர்ஞ்சர்ஸ் பெங்களூரு அணிதான். 17 வருடங்களாக தோல்வியை சந்தித்து வந்த ஆர்சிபி, தொடர்ந்து 18 முறையாக கோப்பை கனவுடன் களம் இறங்கி உள்ளது. அணியின் நட்சத்திர நாயகன் விராட் கோஹ்லி இருந்தும் ஐபிஎல் கோப்பை இன்னும் ஆர்சிபிக்கு கைகூடவில்லை.
2008ல் ஆர்சிபி அணியை ஏலத்தில் எடுத்தது பிரபல தொழில் அதிபர் விஜய்மல்லையா. முதல் தொடரில் கேப்டன் ராகுல் டிராவிட். ஜாக் காலிஸ், அனில் கும்ப்ளே, ஜாகீர் கான், மார்க் பவுச்சர், டேல் ஸ்டெய்ன், கேமரூன் வைட் , ராஸ் டெய்லர், மிஸ்பா-உல்-ஹக் , 19 வயதுக்குட்பட்ட உலகக் கோsப்பை வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லியும் அணியில் இருந்தனர். வெங்கடேஷ் பிரசாத் தலைமை பயிற்சியாளர்.
இருப்பினும் 14 போட்டிகளில் நான்கில் மட்டுமே வெற்றி பெற்று எட்டு அணிகள் கொண்ட அட்டவணையில் ஏழாவது இடத்தைப் பிடித்தது. இதனால் ஒட்டுமொத்த அணியும் மாற்றப்பட்டது.

2009 வீரர் ஏலத்தில் கெவின் பீட்டர்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆரம்ப சுற்று தோல்விகளுக்குப் பிறகு, பீட்டர்சன் வெளியேறியபோது அனில் கும்ப்ளே கேப்டன் பொறுப்பை ஏற்றார். இறுதியில் லீக் அட்டவணையில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. அரையிறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸை தோற்கடித்தனர். ஆனால் டெக்கான் சார்ஜர்ஸுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
2010 ம் ஆண்டில், கும்ப்ளேவின் தலைமையின் கீழ் ராயல் சேலஞ்சர்ஸ் 14 போட்டிகளில் 7 வெற்றிகளைப் பெற்றது, 14 புள்ளிகளைக் குவித்தது. அரையிறுதியில் மும்பை இந்தியன்ஸிடம் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து 3ம் இடத்தை பிடித்தது. இந்த லீக்கின் முடிவில் கும்ப்ளே ஓய்வு பெற்றார். 2011 ல் டேனியல் வெட்டோரி கேப்டனாக நியமிக்கப்பட்டார். சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொண்ட இறுதிப் போட்டியில் 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
2012ல் கிறிஸ் கெய்ல், ஏபிடி வில்லியர்ஸ், முத்தையா முரளிதரன் ஆகியோர் இருந்தும் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை. 2013ல் விராட் கோஹ்லி கேப்டனாக நியமிக்கப்பட்டார். 2021 வரை அந்த பதவியில் இருந்தார். 2013ல் ஐந்தாவது இடத்தையும், 2014ல் 7வது இடத்தையும், 2015ல் எலிமினேட்டர் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான இரண்டாவது தகுதிச் சுற்றில், தோல்வியடைந்து, போட்டியிலிருந்து வெளியேறியது. இந்த நிலையில் ஆர்சிபி உரிமையாளர் பொறுப்பில் இருந்து மல்லையா விலகி அம்ரித் தாமஸ் தலைவராக தேர்வானார்.
2016 சீசனில் ஷேன் வாட்சன், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டூவர்ட் பின்னி, டிராவிஸ் ஹெட் , சாமுவேல் பத்ரி, கே.எல். ராகுல். பர்வேஸ் ரசூல் இடம் பிடித்தனர். இந்த வீரர்களால் மூன்றாவது முறையாக ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி தோல்வியடைந்தது, ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது முறையாக இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
2017ல் 14 போட்டிகளில் 10 தோல்வியடைந்து அட்டவணையின் கடைசி இடத்தைப் பிடித்தது. 2018 ல் 6 வது இடம், 2019 ல் கடைசி இடம், 2020ல் 4வது இடம், 2021ல் 4ம் இடம் பிடித்தது. அத்துடன் ஏபி டி வில்லியர்ஸ் ஓய்வு பெற்றார். இதை தொடர்ந்து விராட் கோஹ்லி கேப்டன் பதவியில் இருந்து விலக, 2022 சீசனில் புதிய கேப்டனாக பேப் டு பிளெஸ்ஸிஸ் அறிவிக்கப்பட்டார். குவாலிபையர் 2 ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸிடம் தோற்றது.

2023ல் 6ம் இடத்தை பிடித்தது. 2024ல் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான எலிமினேட்டரில், நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெளியேறியது. இம்முறை 18-வது சீசனில் புத்தெழுச்சியுடன் களமிறங்குகிறது ஆர்சிபி. புதிய கேப்டனாக ரஜத் பட்டிதார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சீசனில் ஆர்சிபி அணியின் உரிமையாளர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சை பலப்படுத்தி உள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட், அனுபவம் வாய்ந்த புவனேஷ்வர் குமார் ஆகியோரை அணிக்குள் கொண்டு வந்துள்ளது. இவர்கள் இருவருமே இறுதிக்கட்ட ஓவர்களில் சிறப்பாக பந்துவீசும் திறன் கொண்டவர்கள். மேலும் இளம் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாளும் பலம் சேர்க்கக்கூடியவர்.
பேட்டிங்கில் ஐசிசி டி 20 தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் இங்கிலாந்தின் பில் சால்ட் பலம் சேர்க்கக்கூடும். கடந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங்கில் தொடக்க வரிசையில் பில் சால்ட் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார். மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜிதேஷ் சர்மாவும் அணிக்கு பலம் சேர்க்கக்கூடியவராக திகழ்கிறார்.
ஆர்சிபிக்கு இந்த முறை எல்லாம் சாதகமாக இருக்கிறது. ஐபிஎல் கோப்பையை வென்று சாதிக்குமா என்று பார்ப்போம்.
ஆர்சிபி வீரர்கள் பட்டியல்: விராட் கோஹ்லி, ரஜத் படிதார், யாஷ் தயாள், லியாம் லிவிங்ஸ்டோன், பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, ஜோஷ் ஹேசில்வுட், ரசிக் சலாம் தார், சுயாஷ் சர்மா, க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், நுவான் துஷாரா, மனோஜ் பண்டேஜ், எல். ஸ்வஸ்திக் சிக்கரா, அபிநந்தன் சிங், மோஹித் ரதி.