Kohli Salt scaled

அடிச்சி தூக்கிய ஆர்சிபி!

அரண்டு போனது ஆர்ஆர் * ஜெய்ஸ்வால் அதிரடி வீண்

ஜெய்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில், சால்ட் – கோஹ்லி ஜோடியின் அதிரடியால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது.

Kohli Salt

சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீச… ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன் குவித்தது. தொடக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 75 ரன் (47 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார்.

கேப்டன் சஞ்சு சாம்சன் 15, ரியான் பராக் 30, ஹெட்மயர் 9 ரன்னில் பெவிலியன் திரும்பினர். துருவ் ஜுரெல் 35 ரன் (23 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), நிதிஷ் ராணா 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பெங்களூரு பந்துவீச்சில் புவனேஷ்வர், யஷ் தயாள், ஹேஸல்வுட், க்ருணால் பாண்டியா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 174 ரன் என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு, ஃபில் சால்ட் – விராத் கோஹ்லி இணை 8.4 ஓவரில் 92 ரன் சேர்த்து அதிரடி தொடக்கத்தை கொடுத்தது. சால்ட் 65 ரன் (33 பந்து, 5 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி கார்த்திகேயா பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் வசம் பிடிபட்டார்.

Jaiswal

அடுத்து வந்த தேவ்தத் படிக்கல், கோஹ்லியுடன் இணைந்து அதிரடியைத் தொடர… ஆர்சிபி 17.3 ஓவரிலேயே 1 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. கோஹ்லி 62 ரன் (45 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), படிக்கல் 40 ரன்னுடன் (28 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஃபில் சால்ட் ஆட்ட நாயகன் விருது பெற்றார். டி20 போட்டிகளில் 100 அரை சதம் என்ற சாதனை கோஹ்லி வசமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top