போராடி தோற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் * பவுலிங்கில் அசத்தினார் ஹேசல்வுட்
பெங்களூரு: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், விராத் கோஹ்லி – தேவ்தத் படிக்கல் ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் ஆர்சிபி அணி 11 ரன் வித்தியாசத்தில் வென்றது.

எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆர்ஆர் கேப்டன் ரியான் பராக் ஆர்சிபி அணியை பேட் செய்ய அழைத்தார். சால்ட் – கோஹ்லி இணைந்து முதல் விக்கெட்டுக்கு 61 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர்.
சால்ட் 26 ரன் எடுத்து ஹசரங்கா பந்துவீச்சில் ஹெட்மயர் வசம் பிடிபட்டார். அடுத்து கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்த தேவ்தத் படிக்கல் பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட… ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்கோர் இறக்கை கட்டி பறந்தது.
கோஹ்லி 32 பந்தில் அரை சதம் அடிக்க, மறுமுனையில் படிக்கல் 26 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன் எடுத்தார். கோஹ்லி 70 ரன் (42 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), படிக்கல் 50 ரன்னில் (27 பந்து) பெவிலியன் திரும்பினர். கேப்டன் ரஜத் பத்திதார் 1 ரன்னில் வெளியேற, கடைசி கட்டத்தில் டிம் டேவிட், ஜிதேஷ் ஷர்மா அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
டேவிட் 23 ரன் (15 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி கடைசி பந்தில் ரன் அவுட்டானார். ஆர்சிபி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன் குவித்தது. ஜிதேஷ் 20 ரன்னுடன் (10 பந்து, 4 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ராஜஸ்தான் பந்துவீச்சில் சந்தீப் ஷர்மா 2, ஆர்ச்சர், ஹசரங்கா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 206 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ராயல்ஸ் களமிறங்கியது. ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி இணைந்து துரத்தலை தொடங்கினர்.
ஜெய்ஸ்வால் எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் எகிற… ராஜஸ்தான் ஸ்கோர் ஓவருக்கு 12 ரன் என்ற வேகத்தில் உயர்ந்தது. சூர்யவன்ஷி 16 ரன் எடுத்து (12 பந்து, 2 சிக்சர்) புவனேஷ்வர் வேகத்தில் கிளீன் போல்டானார். ஆர்சிபி பவுலர்களை நடுங்க வைத்த ஜெய்ஸ்வால் 49 ரன் (19 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி விக்கெட்டை இழந்தது, ராஜஸ்தான் அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
ஆனாலும், அடுத்து வந்த கேப்டன் ரியான் பராக் 22 ரன் (10 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), நிதிஷ் ராணா 28, ஹெட்மயர் 11, துருவ் ஜுரெல் 47 ரன் ( 34 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) விளாச… ராஜஸ்தான் நம்பிக்கையுடன் போராடியது.
10 பந்தில் 17 ரன் தேவை என்ற நிலையில் ஜுரெல், ஆர்ச்சர் (0), ஹசரங்கா (1) அடுத்தடுத்து ஆட்டமிழக்க… ஆர்சிபி கை ஓங்கியது. 18.2 ஓவரில் 189/5 ஆக இருந்த ராஜஸ்தான், 19.1 ஓவரில் 189/8 என சரிந்தது குறிப்பிடத்தக்கது.

ஆர்ஆர் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 194 ரன் எடுத்து 11 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. தேஷ்பாண்டே 1, பரூக்கி 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பெங்களூரு பந்துவீச்சில் ஜோஷ் ஹேசல்வுட் 4 ஓவரில் 33 ரன்னுக்கு 4 விக்கெட் கைப்பற்றி ஆட்ட நாயகனாக ஜொலித்தார். க்ருணால் 2, புவனேஷ்வர், யஷ் தயாள் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
9 போட்டியில் 6வது வெற்றியை பதிவு செய்த பெங்களூரு அணி 12 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. ராயல்ஸ் 9 போட்டியில் 7வது தோல்வியை சந்தித்து தொடர்ந்து பின்தங்கியுள்ளது.