punjab kings

ஐபிஎல் இறுதிப் போட்டியில் கடைசியாக நுழைவது யார்?

அகமதாபாத்

ஐபிஎல் டி 20 தொடரின் பிளே ஆஃப் தகுதி சுற்று 2-ல் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி தகுதி சுற்று 1 ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியிடம் தோல்வி அடைந்திருந்தது. அந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் ஒட்டுமொத்த பேட்டிங்கும் சரிவை சந்தித்து 101 ரன்களுக்கு ஆட்டமிழந்திருந்தது.

இதேபோன்று மார்கோ யான்சன் இல்லாததும், யுவேந்திர சாஹலின் காயம் பந்துவீச்சு துறையின் சமநிலையை வெகுவாக பாதித்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் கால்பதிக்க வேண்டும் என்றால் அனைத்து துறைகளிலும் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்த வேண்டும்.

5 முறை சாம்பியனான மும்பை எப்போதுமே பிளே ஆஃப் சுற்றில் நுழைந்துவிட்டால் சிறப்பாக செயல்படுவது வழக்கம். எலிமினேட்டர் ஆட்டத்தில் அந்த அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் மும்பை அணி 228 ரன்கள் விளாசி மிரட்டியிருந்தது.

அந்த ஆட்டத்தில் 50 பந்துகளில் 81 ரன்கள் விளாசிய ரோஹித் சர்மா இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். இதேபோன்ற ஜானி பேர்ஸ்டோ பங்கேற்ற முதல் ஆட்டத்திலேயே 22 பந்துகளில் 47 ரன்கள் விளாசி அபாரமான தொடக்கம் அமைத்துக் கொடுத்தார்.

சூயர்குமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோரும் சிறந்த பங்களிப்பை வழங்கினர். மேலும் கடைசி 4 ஓவர்களில் குஜராத் அணியின் வெற்றிக்கு 54 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் மும்பை அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை வசப்படுத்தியிருந்தனர்.

ரிச்சர்ட் க்ளீசன் 16-வது ஓவரில் அபாரமான பார்மில் இருந்த சாய்சுதர்சனை ஆட்டமிழக்கச் செய்து திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். இதேபோன்று 18-வது ஓவரை வீசிய ஜஸ்பிரீத் பும்ரா 9 ரன்களை மட்டுமே வழங்கி குஜராத் அணியின் ரன்ரேட் தேவையை அதிகரித்தார்.

இதனால் இன்றைய ஆட்டத்தில் மும்பை அணியின் பந்துவீச்சு துறை, பஞ்சாப் அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி வரும் 3-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் ஆர்சிபியுடன் பட்டம் வெல்வதற்கு மோதும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top