Shreyas Iyer 1 scaled

11 ரன் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப்

அகமதாபாத்:

ஐபிஎல் டி20 தொடரின் 5வது லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.

மோடி ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில் (மார்ச் 25), டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீசியது. பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் இணைந்து பஞ்சாப் கிங்ஸ் இன்னிங்சை தொடங்கினர். பிரப்சிம்ரன் 5 ரன் மட்டுமே எடுத்து ரபாடா வேகத்தில் அர்ஷத் கான்  வசம் பிடிபட்டார்.

அடுத்து ஆர்யா – கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்து குஜராத் பந்துவீச்சை பதம் பார்த்தனர். பவுண்டரி, சிக்சராக விளாசித் தள்ளிய இருவரும் 21 பந்தில் 51 ரன் சேர்த்தனர். ஆர்யா 47 ரன் (23 பந்து, 7, பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து ரஷித் கான் சுழலில் சாய் சுதர்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

அஸ்மதுல்லா ஒமர்சாய் 16 ரன், கிளென் மேக்ஸ்வெல் 0 (கோல்டன் டக்), மார்கஸ் ஸ்டாய்னிஸ் 20 ரன் (15 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து சாய் கிஷோர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஷ்ரேயாஸ் – ஷஷாங்க் சிங் ஜோடி கடைசி 28 பந்தில் 81 ரன் சேர்க்க, பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன் குவித்தது.

சாய் சுதர்சன்

ஷ்ரேயாஸ் 97 ரன் (42 பந்து, 5 பவுண்டரி, 9 சிக்சர்), ஷஷாங்க் 44 ரன்னுடன் (16 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். குஜராத் பந்துவீச்சில் சாய் கிஷோர் 3, ரபாடா, ரஷித் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 244 ரன் என்ற மிகக் கடினமான இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு சாய் சுதர்சன் – கேப்டன் கில் ஜோடி 5.5 ஓவரில் 61 ரன் சேர்த்து அதிரடி தொடக்கத்தை கொடுத்தது. கில் 33 ரன் (14 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி மேக்ஸ்வெல் சுழலில் ஆர்யா வசம் பிடிபட்டார்.

சாய் சுதர்சன், ஜாஸ் பட்லர் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 84 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். 31 பந்தில் அரை சதம் அடித்த சாய் சுதர்சன் 74 ரன் (41 பந்து, 5 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி அர்ஷ்தீப் பந்துவீச்சில் ஷஷாங்க் வசம் பிடிபட்டார்.

கடைசி 5 ஓவரில் 70 ரன் தேவைப்பட்ட நிலையில் பட்லர் – ஷெர்பேன் ரூதர்போர்டு ஜோடி உறுதியுடன் போராடியது. பட்லர் 54 ரன் (33 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி மார்கோ யான்சென் வேகத்தில் கிளீன் போல்டானார்.

கடைசி 12 பந்தில் 45 ரன் தேவை… ஆட்டம் திக்… திக்… ஆக களத்தில் அனல் பறந்தது. ரூதர்போர்டும் விடுவதாக இல்லை. வைஷாக் வீசிய 19வது ஓவரில் 18 ரன் கிடைத்தது. கடைசி ஓவரில் 27 ரன் தேவைப்பட, அர்ஷ்தீப் வீசிய முதல் பந்தில் திவாதியா ரன் அவுட்.. அடுத்த 2 பந்தில் 6, 2 ரன் எடுத்த ரூதர்போர்டு (46 ரன், 28 பந்து , 4 பவுண்டரி, 3 சிக்சர்) 4வது பந்தில் விக்கெட்டை இழக்க, பஞ்சாப் வெற்றி உறுதியானது. கடைசி பந்தில் ஷாருக் கான் ஆறுதல் சிக்சர் அடித்தார்.

குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 232 ரன் எடுத்து 11 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஷாருக் கான் 6, அர்ஷத் கான் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சில் அர்ஷ்தீப் 2, யான்சென், மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

கேப்டன் ஷ்ரேயாஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். பஞ்சாப் 2 புள்ளிகளை தட்டிச் சென்றது. கவுகாத்தியில் நடக்கும் 6வது லீக் ஆட்டத்தில் (மார்ச் 26) ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top