உதய்ப்பூர்
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் ஆசிய லெஜண்ட்ஸ் லீக் டி 20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் எலிமினேட்டர் ஆட்டத்தில் இலங்கை லயன்ஸ் – ஆப்கானிஸ்தான் பதான்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இலங்கை லயன்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 230 ரன்கள் குவித்தது.
கேப்டன் திஷாரா பெரோ 36 பந்துகளில் 108 ரன்கள் விளாசி அசத்தினார். இதில் 13 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். ஆப்கானிஸ்தான் பதான்ஸ் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் அயன் கான் வீசிய கடைசி ஓவரில் 6 சிக்ஸர்களை மைதானத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பறக்கவிட்டு மிரளச் செய்தார் திஷாரா பெரேரா.
போதாதக்குறைக்கு இந்த ஓவரில் அயன் கான் 3 வைடுகளை வேறு வீசினார். இதனால் இந்த ஓவரில் 39 ரன்களை விளாசியிருந்தது இலங்கை லயன்ஸ்.

ஓரே ஓவரில் 6 சிக்ஸர்களை பறக்கவிட்டதன் மூலம் யுவராஜ் சிங், ஹெர்ஷல் கிப்ஸ், கெய்ரன் பொலார்டு ஆகியோருடன் சாதனை பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார் திஷாரா பெரேரா.
231 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆப்கானிஸ்தான் பதான்ஸ் 7 விக்கெட்கள் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்து 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக கேப்டன் அஷ்கர் ஆப்கன் 31 பந்துகளில், 8 சிக்ஸர்களுடன் 70 ரன்கள் விளாசினார்.