IMG 20250330 WA0030

WTT ஸ்டார் கன்டென்டரில் ஓ ஜுன்-சங்,  மிவா ஹரிமோட்டோ சாம்பியன்

கலப்பு இரட்டையர் பிரிவில் லிம் ஜொங்கூன், சின் யூ பின் ஜோடி வாகை சூடியது

சென்னை

இந்தியன் ஆயில் வழங்கும் WTT ஸ்டார் கன்டென்டர் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை  நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.  கடைசி நாளான நேற்று (மார்ச் 30) ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்றில் இந்தியாவின் மானவ் தாக்கர், பிரான்ஸின் திபோ பொரெட்டுடன் மோதினார்.

இதில் மானவ் தாக்கர் 1-3 (10-12, 9-11, 11-7,7-11) என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னறும் வாய்ப்பை இழந்தார். அரை இறுதியில் தோல்வி அடைந்த மானவ் தாக்கர் 210 புள்ளிகளையும் ரூ.3.45 லட்சம் பரிசையும் பெற்றார். மற்றொரு அரை இறுதியில் 12-ம் நிலை வீரரான கொரியாவின் ஓ ஜுன்-சங் 3-0 (11-4, 12-10, 11-7) என்ற செட் கணக்கில் பிரான்ஸின் ஃபிளேவியன் கோட்டனை வீழ்த்தி இறுதி சுற்றில் நுழைந்தார்.

இதைத் தொடர்ந்து இறுதிப் போட்டியில் திபோ பொரெட், ஓ ஜுன்-சங் பலப்பரீட்சை நடத்தினர்.

இதில் ஓ ஜுன்-சங் முதல் செட்டை 9-11 என இழந்தார். ஆனால் அடுத்த இரு செட்களையும் 11-7, 11-3 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். இதனால் ஓ ஜுன்-சங் 2-1 என முன்னிலை பெற்றார். 4-வது செட்டை திபோ பொரெட் 11-9 தன் வசப்படுத்தினார். இதனால் ஆட்டம் 2-2 என சமநிலையை எட்டியது.

5-வது செட்டில் ஆதிக்கம் செலுத்திய திபோ பொரெட் 11-6 என கைப்பற்றினார். தொடர்ந்து 6-வது செட்டை ஓ ஜுன்-சங் 11-4 என கைப்பற்ற ஆட்டம் 3-3 என சமநிலையை எட்டியது. வெற்றியை தீர்மானித்த கடைசி செட்டை ஓ ஜுன்-சங் 11-7 என கைப்பற்றினார். முடிவில் ஓ ஜுன்-சங் 4-3 (9-11, 11-7, 11-3, 9-11, 6-11, 11-4, 11-7) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பயின் பட்டம் வென்றார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் 2-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் மிவா ஹரிமோட்டோ 3-0 (11-8, 11-4, 12-10) என்ற செட் கணக்கில் கொரியாவின் ஷின் யு பின்னை வீழ்த்தினார். மற்றொரு அரை இறுதியில் 13-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் ஹொனோகா ஹஷிமோடோ 3-0 (11-6, 11-2, 11-2) என்ற செட் கணக்கில் கொரியாவின் கிம் நயோங்கை தோற்கடித்தார். இறுதிப் போட்டியில் மிவா ஹரிமோட்டோ – ஹொனோகா ஹஷிமோடோ பலப்பரீட்சை நடத்தினார்கள்.

இதில் மிவா ஹரிமோட்டோ முதல் செட்டை 9-11 என இழந்தார். ஆனால் அடுத்த 3 செட்டையும் 11-3, 11-8, 11-9 என கைப்பற்றினார். இதனால் மிவா ஹரிமோட்டோ 3-1 என முன்னிலை வகித்தார். ஆனால் 5-வது செட்டை ஹெனோகா ஹஷிமோடோ 12-10 என தன்வசப்படுத்தினார். 6-வது செட்டை மிவா ஹரிமோட்டோ 11-7 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். முடிவில் மிவா ஹரிமோட்டோ 4-2 (9-11, 11-3, 11-8, 11-9, 10-12, 11-7) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் கொரியாவின் லிம் ஜொங்கூன், ஷின் யு பின் ஜோடி 3-0 (11-8, 11-5, 11-4) என்ற செட் கணக்கில் ஜப்பானின் மஹாரு யோஷிமுரா, சாட்சுகி ஓடோ ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top