சென்னையில் நீனா பிரவீன் ஸ்னூக்கர் அகாடமி தொடக்கம்

சென்னை

தமிழகத்தில் ஸ்னூக்கர் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை உருவாக்குவதற்காக சென்னையில் அகாடமி துவங்குகிறார், சர்வதேச வீராங்கனை நீனா பிரவீன்.

2010-ம் ஆண்டு சீனாவில் உள்ள குவாங்சூ நகரில் நடைபெற்ற ஆசிய கேம்ஸில் 8 பால் சாம்பியன்ஷிப்பிலும், 2013-ம் ஆண்டு தென்கொரியாவில் உள்ள இன்சியானில் நடைபெற்ற ஆசிய உள்ளரங்கு கேம்ஸில் 6 ரெட் ஸ்னூக்கர் மற்றும் 9 பால் கேம் ஆகிய இரண்டிலும் பங்கேற்று விளையாடியவர் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்னூக்கர் வீராங்கனை நீனா பிரவீன்.

தென்கொரியாவில் 2 பிரிவு போட்டிகளில் விளையாடியதால், இந்தியாவிலிருந்து பங்கேற்ற முதல் வீராங்கனை என்ற பெருமை பெற்றார்.

அதோடு 15-க்கும் மேற்பட்ட உலக சாம்பியன்ஷிப்பிலும் பங்கேற்று விளையாடியுள்ள நீனா பிரவீன், தனக்கு கிடைத்த அனுபவத்தின்மூலம் தமிழகத்திலிருந்து வீரர், வீராங்கனைகளை உருவாக்குவதற்காக சென்னை வேளச்சேரியில் ‘சென்னை 147 ஸ்போர்ட்ஸ் அகாடமி’ என்ற பெயரில் அகாடமியை தொடங்கியுள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் ஜெ.மேகநாதரெட்டி ஐ.ஏ.எஸ். சிறப்பு விருந்தினராக பங்கேற்று இந்த அகாடமியை திறந்து வைத்தார். மொத்தம் 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவிலான இடத்தில் 3 ஸ்னூக்கர் டேபிள், 2 ஹே பால் டேபிள் மற்றும் 2 அமெரிக்கன் பூல் டேபிள் என மொத்தம் 7 டேபிள்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் அதிவேகமாக பிரபலமாகி வருவதும், பல வீரர், வீராங்கனைகளை ஈர்த்து வருவதும், ஏராளமான பரிசுத்தொகைகளை அள்ளித்தருவதுமான ஹே பால் விளையாட்டுக்கு தமிழகத்திலேயே முதன்முதலாக டேபிள் அமைத்து பயிற்சி கொடுக்கப்படுவது இங்குதான் என்று கூறினார் நீனா பிரவீன்.

விரைவில் ஒலிம்பிக்கிலும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படும் ஹேபால் விளையாட்டில் தமிழகத்தில் இருந்து ஒருவர் பதக்கம் வென்றுத்தர வேண்டும் என்பதே தனது இலக்கு என்று கூறுகிறார் நீனா பிரவீன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top