MI in Play offs

மும்பை இந்தியன்ஸ் முன்னேற்றம் டெல்லிகேப்பிடல்ஸ் வெளியேற்றம்

ஸ்கை, சாண்ட்னர், பும்ரா அசத்தல்

மும்பை: ஐபிஎல் 18வது சீசன் 63வது லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 59 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

MI in Play offs

வாங்கடே மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் டு பிளெஸ்ஸி முதலில் பந்துவீச முடிவு செய்தார். ரெகுலர் கேப்டன் அக்சர் படேல் உடல்நிலை சரியில்லாததால் இப்போட்டியில் பங்கேற்கவில்லை.

ரோகித் 5, வில் ஜாக்ஸ் 21 ரன் (13 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), ரிக்கெல்டன் 25 ரன்னில் (18 பந்து, 2 சிக்சர்) பெவிலியன் திரும்ப, மும்பை அணி 6.4 ஓவரில் 58 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், சூரியகுமார் யாதவ் – திலக் வர்மா இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

அதிரடியாக விளையாடி டிசி பவுலர்களை தெறிக்கவிட்ட ஸ்கை அரை சதம் விளாசினார். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 55 ரன் சேர்த்தது. திலக் 27 ரன் (27 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து அவுட்டாக, கேப்டன் ஹர்திக் பாண்டியா 3 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தார்.

கடைசி கட்டத்தில் சூரியகுமார் – நமன் திர் ஜோடி பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட… மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன் குவித்தது. சூரியகுமார் 73 ரன் (43 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்), நமன் திர் 24 ரன்னுடன் (8 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி பந்துவீச்சில் முகேஷ் குமார் 2, சமீரா, முஸ்டாபிசுர், குல்தீப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

SKY 2

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 181 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் களமிறங்கியது. டு பிளெஸ்ஸி 6, கே.எல்.ராகுல் 11, அபிஷேக் போரெல் 6 ரன்னில் அணிவகுக்க… டெல்லி 27 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது.

விப்ராஜ் நிகம் 20 ரன் எடுத்து சாண்ட்னர் சூழலில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டாக, ஸ்டப்ஸ் 2 ரன் எடுத்து பும்ரா வேகத்தில் எல்பிடபுள்யு ஆனார். ஓரளவு தாக்குப்பிடித்த சமீர் ரிஸ்வி 39 ரன் (35 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி சாண்ட்னர் பந்துவீச்சில் கிளீன் போல்டாக, டெல்லியின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது.

அசுதோஷ் ஷர்மா 18 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் அவுட்டாகி அணிவகுத்தனர். டெல்லி கேப்பிடல்ஸ் 18.2 ஓவரிலேயே 121 ரன்னுக்கு சுருண்டு 59 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியதுடன் பிளே ஆப் சுற்று வாய்ப்பையும் பறிகொடுத்தது. துஷ்மந்த சமீரா 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மும்பை பந்துவீச்சில் மிட்செல் சாண்ட்னர் 4 ஓவரில் 11 ரன்னுக்கு 3 விக்கெட், பும்ரா 3.2 ஓவரில் 12 ரன்னுக்கு 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினர். போல்ட், தீபக், ஜாக்ஸ், கர்ண் ஷர்மா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஸ்கை ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

மும்பை அணி 13 போட்டியில் 8 வெற்றியுடன் 16 புள்ளிகள் பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. குஜராத், ஆர்சிபி, பஞ்சாப், மும்பை அணிகள் பிளே ஆப் சுற்றில் மல்லுக்கட்ட உள்ளன.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top