போராடி தோற்றது குஜராத் டைட்டன்ஸ் * ரோகித் ஆட்ட நாயகன்
நியூ சண்டிகர்: ஐபிஎல் 18வது சீசன் எலிமினேட்டரில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன் வித்தியாசத்தில் வென்று குவாலிபயர்-2ல் விளையாட தகுதி பெற்றது.

மகாராஜா யாதவிந்த்ரா சிங் சர்வதேச அரங்கில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன் குவித்தது.
ரோகித் ஷர்மா அதிகபட்சமாக 81 ரன் (50 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்), ஜானி பேர்ஸ்டோ 47 ரன் (22 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), சூரியகுமார் 33 ரன் (20 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), திலக் வர்மா 25 ரன் (11 பந்து, 3 சிக்சர்), நமன் திர் 9 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
கேப்டன் ஹர்திக் பாண்டியா 22 ரன் (9 பந்து, 3 சிக்சர்), மிட்செல் சாண்ட்னர் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். குஜராத் பந்துவீச்சில் பிரசித், சாய் கிஷோர் தலா 2, முகமது சிராஜ் 1 விக்கெட் கைப்பற்றினர்.

அடுத்து 20 ஓவரில் 229 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ், முதல் ஓவரிலேயே கேப்டன் கில் (1 ரன்) விக்கெட்டை இழந்து அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது. குசால் மெண்டிஸ் 20 ரன் (10 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி வெளியேறினார்.
சாய் சுதர்சன் – வாஷிங்டன் சுந்தர் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 84 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். வாஷிங்டன் 48 ரன் (24 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), சாய் சுதர்சன் 80 ரன் (49 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்ப, மும்பை கை ஓங்கியது.
கடைசி கட்டத்தில் ரூதர்போர்டு 24 ரன், ஷாருக் கான் 13 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தனர். கடுமையாகப் போராடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன் எடுத்து 20 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி ஏமாற்றத்துடன் வெளியேறியது. ராகுல் திவாதியா 16 ரன், ரஷித் கான் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சில் டிரெண்ட் போல்ட் 2, பும்ரா, கிளீசன், சாண்ட்னர், அஷ்வனி குமார் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். துல்லியமாகப் பந்துவீசி அசத்திய பும்ரா 4 ஓவரில் 27 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தது மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு வெகுவாக உதவியது. ரோகித் ஷர்மா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிபயர்-2 ஆட்டத்தில் (ஜூன் 1) பஞ்சாப் கிங்ஸ் அணியின் சவாலை சந்திக்கிறது. அந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, 18வது சீசனில் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் பரபரப்பான பைனலில் (ஜூன் 3) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதும். இந்த 2 போட்டிகளும் அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளன.