சுதர்சன், கில் அரை சதம் வீண் * குஜராத் ஏமாற்றம்
லக்னோ: ஐபிஎல் 18வது சீசன் 26வது லீக் ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் எய்டன் மார்க்ரம் மற்றும் நிகோலஸ் பூரன் அதிரடி ஆட்டத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

வாஜ்பாய் ஏகனா அரங்கில் நடந்த இப்போட்டியில் (ஏப்.12 பகல்/இரவு), டாஸ் வென்ற எல்எஸ்ஜி முதலில் பந்துவீசியது. டைட்டன்ஸ் தொடக்க வீரர்கள் சாய் சுதர்சன் – கேப்டன் கில் ஜோடி முதல் விக்கெட்டுக்கு அதிரடியாக 12 ஓவரில் 120 ரன் சேர்த்து அசத்தியது.
குஜராத் எளிதாக 200+ ஸ்கோரை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்… கில் 60 ரன் (38 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்), சுதர்சன் 56 ரன் (37 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அடுத்தடுத்து ஆட்டமிழந்தது அந்த அணிக்கு பின்னடைவை கொடுத்தது.
அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் 2, பட்லர் 16, ரூதர்போர்டு 22 ரன் எடுக்க, ராகுல் திவாதியா டக் அவுட்டானார். குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன் குவித்தது. ஷாருக் கான் 11, ரஷித் கான் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
லக்னோ பந்துவீச்சில் ஷர்துல் தாகூர், ரவி பிஷ்னோய் தலா 2, திக்வேஷ் ரதி, ஆவேஷ் கான் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து, 20 ஓவரில் 181 ரன் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் சூப்பர் ஜெயண்ட்ஸ் களமிறங்கியது.
எய்டன் மார்க்ரம் – ரிஷப் பன்ட் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 65 ரன் சேர்த்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். ரிஷப் 21 ரன்னில் வெளியேற, அடுத்து மார்க்ரம் – நிகோலஸ் பூரன் ஜோடி 2வது விக்கெட்டுக்கு பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்டு குஜராத் பந்துவீச்சை சிதறடித்தது.

மார்க்ரம் 58 ரன் (31 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்), நிகோலஸ் பூரன் 61 ரன் (34 பந்து, 1 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். நடப்பு தொடரில் பூரன் விளாசிய 4வது அரை சதம் இது. டேவிட் மில்லர் 7 ரன்னில் அவுட்டானார். எனினும், கடைசி கட்டத்தில் பதற்றமின்றி விளையாடிய ஆயுஷ் பதோனி வெற்றிக்கோட்டை எட்ட உதவினார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 19.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 186 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. பதோனி 28 ரன் (20 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), அப்துல் சமத் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். குஜராத் பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா 2, ரஷித் கான், வாஷிங்டன் சுந்தர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
எய்டன் மார்க்ரம் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.