bumrah

ஜஸ்பிரீத் பும்ரா 300 !

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத்தில் ராஜீவ் காந்தி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. டிராவிஸ் ஹெட்0, அபிஷேக் சர்மா 8, இஷான் கிஷன் 1, நித்திஷ் குமார் ரெட்டி 2 ரன்களில் நடையை கட்டினர்.

35 ரன்களுக்கு 5 விக்கெட்களை பறிகொடுத்த நிலையில் ஹென்ரிச் கிளாசன் அதிரடியாக விளையாடி 44 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 71 ரன்களும் அபினவ் மனோகர் 37 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 43 ரன்களும் விளாசியதன் காரணமாகவே ஹைதராபாத் அணியால் கவுரவமான ஸ்கோரை எடுக்க முடிந்தது.

மும்பை அணி தரப்பில் டிரெண்ட் போல்ட் 4 ஓவர்களை வீசி 26 ரன்களை வழங்கி 4 விக்கெட்களை வீழ்த்தினார். தீபக் சாஹர் 2 விக்கெட்கள் கைப்பற்றினார். ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 144 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மும்பை அணி 15.4 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தொடக்க வீரரான ரோஹித் சர்மா 46 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் விளாசினார். சூர்யகுமார் யாதவ் 19 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் சேர்த்தார். ரியான் ரிக்கெல்டன் 11, வில் ஜேக்ஸ் 22 ரன்களில் ஆட்டமிழந்தனர். 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி +0.673 நிகர ரன்ரேட்டுன் 10 புள்ளிகளுடன் பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியது.

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஒரு விக்கெட் கைப்பற்றினார். டி 20 கிரிக்கெட் போட்டிகளில் இது அவரது 300-வது விக்கெட் ஆகும். 238 போட்டிகளில் அவர், இந்த விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இந்த மைல்கல்லை எட்டிய 5-வது இந்தியர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார். இந்திய வீரர்களில் யுவேந்திர சாஹல், பியூஷ் சாவ்லா, புவனேஷ்வர் குமார், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும் 300 விக்கெட்களை கைப்பற்றியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top