இந்தியன் ஆயில் யுடிடி சீசன் 6 யு மும்பாவை 8-7 என்ற கணக்கில் வீழ்த்தியது ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ்

12-நிலை வீராங்கனையான பெர்னாடெட் சாக்ஸை தோற்கடித்து அசத்தினார் ஸ்ரீஜா அகுலா

அகமதாபாத், ஜூன் 5:

இந்தியன் ஆயில் யுடிடி (அல்டிமேட்டேபிள் டென்னிஸ்) சீசன் 6-ல் இன்று அகமதாபாத்தில் உள்ள EKA Arena அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் – யு மும்பா அணிகள் மோதின.

முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் கனக் ஜா (அமெரிக்கா), யு மும்பா அணியின் லிலியன் பார்டெட்டுடன் (பிரான்ஸ்) மோதினார். இதில் கனக்ஜா 2-1 (11-6, 7-11, 11-9) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

2-வது நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் இந்திய நட்சத்திரமான ஸ்ரீஜா அகுலா, யு மும்பா அணியின் பெர்னாடெட் சாக்ஸுடன் (ருமேனியா) பலப்பரீட்சை நடத்தினார். இதில் உலகத் தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள பெர்னாடெட் சாக்ஸை 2-1 (11-9, 8-11, 11-5) என்ற கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார் ஸ்ரீஜா அகுலா.

இந்த வெற்றியால் இந்த மோதலில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணி 4-2 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. 3-வது நடைபெற்ற கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் கனக் ஜா, ஸ்ரீஜா அகுலா ஜோடியானது யு மும்பா அணியின் ஆகாஷ் பால், பெர்னாடெட் சாக்ஸ் ஜோடியுடன் மோதியது.

இதில் யு மும்பா அணியின் ஆகாஷ் பால், பெர்னாடெட் சாக்ஸ் ஜோடி 3-0 (11-8, 11-6, 11-6) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் இந்த டையில் யு மும்பா அணி 6-5 என முன்னிலையில் இருந்தது. 4-வது நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் இந்திய நட்சத்திரமான ஜீத் சந்திரா, யு மும்பா அணியின் இளம் இந்திய வீரரான ஆகாஷ் பாலுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

இதில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் ஜீத் சந்திரா 2-1 (5-11, 11-10, 11-7) என்ற கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார்.

இந்த வெற்றியின் மூலம் இரு அணிகள் இடையிலான டை 6-6 என சமநிலையை அடைந்தது. கடைசியாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் பிரிட் ஈர்லாண்ட் (நெதர்லாந்து), யு மும்பா அணியின் யஷஸ்வினி கோர்படேவுடன் மோதினார்.

இதில் 3 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்ற பிரிட் ஈர்லாண்ட் 2-1 (11-7, 11-4, 7-11) என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் யு மும்பா அணிக்கு எதிரான டையில் 8-7 என்ற கணக்கில் வெற்றி பெற்றது ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணி.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top