டெல்லி – ஜெய்ப்பூர் ; கோவா – அகமதாபாத் அணிகள் மோதுகின்றன
அகமதாபாத்
இந்திய மற்றும் சர்வதேச டேபிள் டென்னிஸ் நட்சத்திரங்கள் பங்கேற்கும் இந்தியன் ஆயில் யுடிடி சீசன் 6 அகமதாபாத்தில் உள்ள EKA மைதானத்தில் இன்று (மே 31) தொடங்குகிறது.
8 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் டெல்லி தபாங், ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதைத் தொடர்ந்து நடைபெறும் 2-வது ஆட்டத்தில் டெம்போ கோவா சாலஞ்சர்ஸ், அகமதாபாத் எஸ்ஜி பைப்பர்ஸ் அணிகள் மோதுகின்றன.
16 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 23 டைகள் நடைபெறுகின்றன. இறுதிப் போட்டி ஜூன் 15-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தொடரின் அனைத்து ஆட்டங்களும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கேல் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ், ஜியோ ஹாட்ஸ்டார் ஆகியவற்றில் நேரடி ஒளிபரப்பாகிறது.
இந்தியாவின் தேசிய தரவரிசையில் முதலிடத்தில் உள்ள தியா சித்தலே இந்த சீசனில் அதிக மதிப்புடைய வீராங்கனையாக மீண்டும் களமிறங்குகிறார். ஒரு ரசிகையாக அவர் ஸ்டாண்டில் இந்த ஆட்டத்தைப் பார்த்த சில ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது களத்தில் அவர் விளையாடி வருகிறார்.

தியா சித்தலே கூறும்போது, “ யுடிடி-ன் முதல் சீசன் நடந்தபோது, நான் கேலரியில் அமர்ந்து மிகவும் ஆர்வத்துடன் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த லீக் தொடங்கியதிலிருந்து, நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். இதில் விளையாட விரும்பினேன். 2023-ல் எனக்கு வாய்ப்பு கிடைத்தது, அது மிகவும் உற்சாகமாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும், இந்த லீக் எப்போது நடக்கும் என்று நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.
நடப்பு சீசனில் தியா சித்தலே, தபாங் டெல்லி அணிக்காக களமிறங்குகிறார்.
இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் (TTFI) ஆதரவுடன், நீரஜ் பஜாஜ் மற்றும் விட்டா டானி ஆகியோரால் நடத்தப்படும் இந்தியன் ஆயில் UTT, ஒரு முதன்மையான தொழில்முறை லீக்காக தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இந்த சீசனில் 16 ஒலிம்பியன்கள் உட்பட 14 நாடுகளைச் சேர்ந்த 48 வீரர்கள் பங்கேற்கின்றனர், இது போட்டியின் வலுவான சர்வதேச இருப்பை எடுத்துக்காட்டுகிறது.
இந்த ஆண்டின் தொடக்க விழா, நடப்பு சாம்பியனான ஹர்மீத் தேசாய்க்கு ஒரு சிறப்பு கதைக்களத்தை வழங்குகிறது, அவர் இந்தியன் ஆயில் யுடிடி வரலாற்றில் முதல் முறையாக தனது சொந்த மாநிலமான குஜராத்தில் டெம்போ கோவா சேலஞ்சர்ஸ் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
முதன்முறையாக யுடிடி தொடரில் அறிமுகமாகும் சீனாவின் ஃபேன் சிகியை, சீசன் 3 சாம்பியனான ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ் அணி இந்தியன் ஆயில் யுடிடி ஏலத்தில் 19.7 லட்சம் டோக்கன்ளுக்கு ஏலம் எடுத்திருந்தது. இதன் மூலம் ஏலத்தில் அதிக மதிப்புள்ள வீராங்கனை என்ற சாதனையை அவர், படைத்திருந்தார்.
இந்த ஆண்டு இந்தியன் ஆயில் யுடிடியில் ஜெர்மனி, இத்தாலி, சீனா, நைஜீரியா, புயிர்ட்டோ ரிக்கோ, கஜகஸ்தான், எகிப்து உட்பட 14 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இது உயரடுக்கு வீரர்களுக்கான லீக் என்ற அதன் நிலையை வலுப்படுத்தும் உலகளாவிய கலவையாகும்.
லத்தீன் அமெரிக்க டேபிள் டென்னிஸின் முன்னோடி வீராங்கனையும், இந்தியன் ஆயில் யுடிடி சீசன் 6-ல் டாப் ரேங்கில் 2-வது இடத்தில் உள்ள வீராங்கனையும் புயிர்ட்டோ ரிக்கோ நட்சத்திரமான அட்ரியானா டயஸ், நடப்பு சீசனில் அறிமுகமாகும் கொல்கத்தா தண்டர்பிளேட்ஸுஸ் அணியில் விளையாடுவதற்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்தியாவுக்கு திரும்பி வந்துள்ளார்.
எகிப்தின் டினா மெஷ்ரெஃப், ஜெர்மனியின் ரிக்கார்டோ வால்டர் மற்றும் அமெரிக்காவின் கனக் ஜா உள்ளிட்ட உயர்மட்ட அளவிலான சர்வதேச வீரர்கள் இந்த ஆண்டு UTT-யில் அறிமுகமாகின்றனர்.
இந்தியன் ஆயில் UTT சீசன் 6 இன் அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கேல் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் ஒளிபரப்பப்படும், மேலும் JioHotstar இல் ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்யப்படும். இந்தியாவிற்கு வெளியே உள்ள பார்வையாளர்கள் UTT இன் Facebook பக்கத்தில் போட்டிகளை காணலாம். போட்டியை நேரில் காண்பதற்கான டிக்கெட்டுகள் BookMyShow இணையதளத்தில் கிடைக்கும்.