DC celebration scaled

சிஎஸ்கேவுக்கு ஹாட்ரிக் தோல்வி

ராகுல் அதிரடியில் டெல்லி நம்பர் 1

சென்னை: சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 25 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நடந்த இப்போட்டியில் (ஏப்.5 பகல்/இரவு), டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் அக்சர் படேல் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். சென்னை அணி சேசிங்கில் வீக் ஆகிவிட்டது என்பதை துல்லியமாகக் கணித்தே அவர் சாதுர்யமாக இந்த முடிவை எடுத்தார்.

KLR

மெக்கர்க் – கே.எல்.ராகுல் இணைந்து கேப்பிடல்ஸ் இன்னிங்சை தொடங்கினர். மெக்கர்க் டக் அவுட்டானது டிசி அணிக்கு அதிர்ச்சி அளித்தாலும், கே.எல்.ராகுல் – அபிஷேக் போரெல் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 54 ரன் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தது.

போரெல் 33 ரன் (20 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஜடேஜா சுழலில் பதிரணா வசம் பிடிபட்டார். அடுத்து வந்த கேப்டன் அக்சர் படேல் 21 ரன், சமீர் ரிஸ்வி 20 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், அதிரடியாக விளையாடிய ராகுல் 33 பந்தில் அரை சதம் அடித்தார்.

கடைசி கட்டத்தில் ராகுல் – ஸ்டப்ஸ் ஜோடி சிஎஸ்கே பந்துவீச்சை பதம் பார்க்க, டிசி ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.கே.எல்.ராகுல் 77 ரன் (51 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி பதிரணா பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் தோனியிடம் பிடிபட்டார். அசுதோஷ் 1 ரன் எடுத்து ரன் அவுட்டானார்.

டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன் குவித்தது. ஸ்டப்ஸ் 24 ரன் (12 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), விப்ராஜ் நிகம் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை பந்துவீச்சில் கலீல் அகமது 2, ஜடேஜா, நூர் அகமது, மதீஷா பதிரணா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 184 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் துரத்தலை தொடங்கிய சிஎஸ்கே 5.3 ஓவரில் 41 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. ரச்சின் ரவிந்த்ரா 3, கேப்டன் ருதுராஜ் 5, டெவன் கான்வே 13 ரன்னில் அணிவகுத்தனர்.

ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசி திருப்தியடைந்த ஷிவம் துபே 18 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, ஜடேஜா 2 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். 10.4 ஓவரில் 74 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறிய சிஎஸ்கே அணி விஜய் ஷங்கர் – தோனி ஜோடியை மலை போல நம்பியது. ஆனால், ஓவருக்கு 6 ரன் என்ற அளவிலேயே அவர்கள் ஆமை வேக ஆட்டம் ஆட… தேவைப்படும் ரன்ரேட் ஏறிக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் ஓவருக்கு 25 ரன் தேவை என்றாக, சென்னை அணியின் தோல்வி உறுதியானது.

விஜய் ஷங்கர் 43 பந்தில் அரை சதம் அடித்தார். தோனி தன் பங்குக்கு ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாச… சிஎஸ்கே ரசிகர்கள் புளகாங்கிதம் அடைந்தனர்! சென்னை 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன் மட்டுமே சேர்த்து 25 ரன் வித்தியாசத்தில் தொடர்ச்சியாக 3வது தோல்வியைத் தழுவியது.

DC celebration

விஜய் ஷங்கர் 69 ரன் (54 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), தோனி 30 ரன்னுடன் (26 பந்து) ஆட்டமிழக்காமல் இருந்தனர். டிசி பந்துவீச்சில் நிகம் 2, ஸ்டார்க், முகேஷ், குல்தீப் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். பெரிய இலக்கை துரத்தும்போது, தேவைப்படும் ரன்ரேட்டை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற அடிப்படையான அம்சத்தை கூட சிஎஸ்கேவால் அமலாக்க முடியாததேதோல்விக்கு முக்கிய காரணம் என்பது பொடிசுகளுக்கே தெரிந்திருக்கும்போது ‘மேல்மாடி’ காலியாகிவிட்டது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

முதல் 10 ஓவரில் 5 அல்லது 6 விக்கெட் சரிந்தாலும் பரவாயில்லை… குறைந்தபட்சம் 100 ரன்னையாவது கடந்திருக்க வேண்டும் என்ற முனைப்போடு விளையாடினால் மட்டுமே சென்னை அணியால் வெற்றிக் கோட்டை தொட முடியும். இனியாவது இந்த வியூகத்தை செயல்படுத்துவார்களா என்பதே சிஎஸ்கே ரசிகர்களின் அங்கலாய்ப்பு கலந்த எதிர்பார்ப்பு.

அதே சமயம் தொடர்ச்சியாக 3வது வெற்றியைப் பதிவு செய்த டெல்லி கேப்பிடல்ஸ் 6 புள்ளிகளுடன் கம்பீரமாக முதலிடத்துக்கு முன்னேறியது. கே.எல்.ராகுல் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top