Sai Susharsan 2 scaled

குஜராத்திடம் மண்டியிட்ட மும்பை

சுதர்சன், பிரசித் அமர்க்களம்

அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் 9வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதிய குஜராத் டைட்டன்ஸ் 36 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது.

நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில் (மார்ச் 29), டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியை பேட் செய்ய அழைத்தார். சாய் சுதர்சன், கேப்டன் சுப்மன் கில் இணைந்து ஜிடி இன்னிங்சை தொடங்கினர்.

Sai Susharsan 2

அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 78 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. கில் 38 ரன் (27 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஹர்திக் பாண்டியா வேகத்தில் நமன் திர் வசம் பிடிபட்டார்.

அடுத்து சாய் சுதர்சன் – ஜாஸ் பட்லர் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 51 ரன் சேர்த்தது. பட்லர் 39 ரன் (24 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), ஷாருக் கான் 9 ரன்னில் பெவிலியன் திரும்பினர். 33 பந்தில் அரை சதம் அடித்த சுதர்சன் 63 ரன் (41 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), ரூதர்போர்டு 18 ரன் எடுக்க, அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர்.

குஜராத் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன் குவித்தது. காகிசோ ரபாடா 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை பந்துவீச்சில் ஹர்திக் 2, போல்ட், தீபக் சாஹர், மூஜீப், சத்யநாரயணா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஃபீல்டிங்கில் மும்பை வீரர்கள் மோசமாக செயல்பட்டதும் குஜராத் ரன் குவிப்புக்கு வெகுவாக உதவியது குறிப்பிடத்தக்கது.

Prasid Krishna

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 197 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. ரோகித் ஷர்மா 8 ரன், ரியான் ரிக்கெல்டன் ரன் எடுத்து முகமது சிராஜ் வேகத்தில் விக்கெட்டை பறிகொடுக்க, மும்பை இந்தியன்ஸ் 35 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது.

இந்த நிலையில் திலக் வர்மா – சூரியகுமார் ஜோடி அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்த முயற்சித்தது. இருவரும் 3வது விக்கெட்டுக்கு 62 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். எனினும், திலக் வர்மா 39 ரன் (36 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), ராபின் மின்ஸ் 3, சூரியகுமார் 48 ரன் (28 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் ஹர்திக் 11 ரன் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, மும்பை இந்தியன்ஸ் தோல்வியின் பிடியில் சிக்கியது.

அந்த அணியால் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.நமன் திர், மிட்செல் சாண்ட்னர் தலா 18 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். குஜராத் பந்துவீச்சில் சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட், ரபாடா, சாய் கிஷோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

முதல் வெற்றியை ருசித்த குஜராத் 3வது இடத்துக்கு முன்னேற, தொடர்ச்சியாக 2வது தோல்வியைத் தழுவிய மும்பை 9வது இடத்தில் உள்ளது. 4 ஓவரில் 18 ரன் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்திய பிரசித் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.     

அடுத்து விசாகப்பட்டணத்தில் நடக்கும் 10வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளும் (மார்ச் 30, பிற்பகல் 3.30 தொடக்கம்), கவுகாத்தியில் இரவு 7.30க்கு தொடங்கும் 11வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளும் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top