JB 3

ஜோஸ் பட்லர் அதிரடியில் வீழ்ந்தது கேப்பிடல்ஸ்

அகமதாபாத்: டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ஜோஸ் பட்லர் – ஷெர்பேன் ரூதர்போர்டு ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

மோடி ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் கேப்டன் கில் முதலில் பந்துவீச முடிவு செய்தார். போரெல், கருண் நாயர் இணைந்து டெல்லி இன்னிங்சை தொடங்கினர். போரெல் 18 ரன் (9 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அர்ஷத் கான் பந்துவீச்சில் சிராஜ் வசம் பிடிபட்டார்.

JB

கே.எல்.ராகுல் 28 ரன் (14 பந்து, 4 பவுண்டரி), கருண் நாயர் 31 ரன் (18 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 31 ரன் (21 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் அக்சர் படேல் 39 ரன் (32 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர்.

கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய அசுதோஷ் ஷர்மா 37 ரன் (19 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி சாய் கிஷோர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். நிகம் 0, டோனோவன் 1 ரன்னில் வெளியேற… டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 203 ரன் குவித்தது.ஸ்டார்க் 2, குல்தீப் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

குஜராத் பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட், சிராஜ், அர்ஷத், இஷாந்த், சாய் கிஷோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 20 ஓவரில் 204 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் குஜராத் களமிறங்கியது.

Prasidh Krishna 2

சுதர்சன், கேப்டன் கில் இணைந்து துரத்தலை தொடங்கினர். கில் 7 ரன் எடுத்து துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். சுதர்சன் – பட்லர் இணை 2வது விக்கெட்டுக்கு 60 ரன் சேர்த்தது. சுதர்சன் 36 ரன் (21 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி குல்தீப் சுழலில் ஸ்டப்ஸ் வசம் பிடிபட்டார்.

இதையடுத்து, பட்லர் – ரூதர்போர்டு ஜோடி 3வது விக்கெட்டுக்கு அதிரடியில் இறங்க… டைட்டன்ஸ் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இருவரும் சேர்ந்து 119 ரன் சேர்க்க குஜராத் வெற்றியை நெருங்கியது. ரூதர்போர்டு 43 ரன் (34 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி முகேஷ் குமார் பந்துவீச்சில் அவுட்டானார்.

அடுத்து வந்த ராகுல் திவாதியா 3 பந்தில் 1 பவுண்டரி, 1சிக்சர் உள்பட 11 ரன் விளாச, குஜராத் டைட்டன்ஸ் 19.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 204 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. பட்லர்  97 ரன் (54 பந்து, 11 பவுண்டரி, 4 சிக்சர்), திவாதியா 11 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

டெல்லி பந்துவீச்சில் முகேஷ், குல்தீப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பட்லர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top