Msd

இம்பாக்ட் பிளேயர் விதியால்ஐபிஎல் தொடரில் ரன் மழையா?

மனம் திறக்கிறார் எம்எஸ் தோனி

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணியில் இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய விக்னேஷ் புதூர் முக்கியமான கட்டத்தில் 3 விக்கெட்களை வீழ்த்தி கவனம் ஈர்த்தார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் அஷுதோஷ் சர்மா இம்பாக்ட் பிளேயர் விதியின் கீழ் களமிறங்கி 31 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 5 பவுண்ரிகளுடன் 66 ரன்கள் விளாசி அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தார்.

இந்நிலையில் இம்பாக்ட் பிளேயர் விதி தொடர்பாக ஜியோ ஸ்டார் நிகழ்ச்சியில் எம்.எஸ்.தோனி கூறியதாவது: ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி அறிமுகப்படுத்தப்பட்டபோது, அந்த விதி உண்மையில் தேவையற்றதாக உணர்ந்தேன். ஒரு விதத்தில் இம்பாக்ட் பிளேயர் விதி எனக்கு உதவியது. ஆனால், அதே நேரத்தில் அந்த விதி எனக்கு தேவையற்றதாகவும் இருந்தது.

நான் போட்டிகளில் தொடர்ந்து விக்கெட் கீப்பிங் செய்கிறேன். நான் இம்பாக்ட் பிளேயர் கிடையாது. நான் தொடர்ந்து ஆட்டத்தில் ஈடுபட வேண்டிய அவசியமிருக்கிறது. இம்பாக்ட் பிளேயர் விதியினால் அதிக ரன்கள் குவிக்க முடிவதாக நிறைய பேர் கூறுகிறார்கள்.

ஆனால், ஆடுகளங்களின் தன்மை மற்றும் வீரர்கள் எந்த அளவுக்கு நன்றாக விளையாடுகிறார்கள் என்பதைப் பொருத்தே அதிக ரன்கள் வருவதாக நான் நம்புகிறேன். கூடுதல் பேட்ஸ்மேனால் மட்டுமே அதிக ரன்களை அணிகள் குவிக்கின்ற எனக் கூறிவிட முடியாது.

நாம் எப்படி சிந்திக்கிறோம் என்ற மனநிலையைப் பொருத்தே போட்டியில் ரன்கள் குவிப்பது அமைகிறது. கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைப்பதால், அணிகள் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க வேண்டும் என்ற மனநிலையில் உள்ளனர்.

இவ்வாறு தோனி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top