Pooran

4 ரன்னில் வெற்றியை கோட்டை விட்டது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (ஏப்ரல் 8) நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 238 ரன்கள் குவித்தது.

மிட்செல் மார்ஷ் 48 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 81 ரன்ளும், நிகோலஸ் பூரன் 36 பந்துகளில், 8 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 87 ரன்களும் எய்டன் மார்க்ரம் 28 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 47 ரன்களும் விளாசினர்.

239 ரன்கள் இலக்குடன் பேட் செய்த கொல்கத்தா அணியானது 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. அதிகட்சமாக அஜிங்க்ய ரஹானே 35 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 61 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 29 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 45 ரன்களும் விளாசினர்.

இறுதி கட்டத்தில் போராடிய ரிங்கு சிங் 15 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 38 ரன்களும் விளாசிய போதிலும் கொல்கத்தா அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ரவி பிஷ்னோய் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 24 ரன்கள் தேவையாக இருந்தது. முதல் பந்தை ஹர்ஷித் ராணா பவுண்டரிக்கு விரட்ட அடுத்த பந்தை வீணடித்தார். 3-வது பந்தில் ஒரு ரன் சேர்க்கப்பட்டது. இதனால் 3 பந்துகளில் 19 ரன்கள் தேவை என நெருக்கடி அதிகமானது. 3 சிக்ஸர்களை அடித்தால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு செல்லும் என்ற நிலையில் அடுத்தடுத்து பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய ரிங்கு சிங்கு கடைசி பந்தை சிக்ஸருக்கு விளாசினார். ஆனால் அது வெற்றிக்கு போதுமானதாக இல்லை.

லக்னோ அணி தரப்பில் ஆகாஷ் தீப், ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். அவேஷ் கான், திக்வேஷ் ராத்தி, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகனாக நிகோலஸ் பூரன் தேர்வானார். 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லக்னோ அணி நடப்பு சீசனில் 3-வது வெற்றியை பதிவு செய்தது. அந்த அணி 5 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 2 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் (சிஎஸ்கே – பஞ்சாப் போட்டிக்கு முன்னதாக) உள்ளது. கொல்கத்தா அணிக்கு இது 3-வது தோல்வியாக அமைந்தது. அந்த அணி 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top