Stubbs Rahul

சூப்பர் ஓவரில் வென்றது டெல்லி

ராஜஸ்தான் ராயல்ஸ் ஏமாற்றம்

டெல்லி: ஐபிஎல் 18வது சீசன் 32வது லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக பரபரப்பான சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.

அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை பேட் செய்ய அழைத்தார். மெக்கர்க் – போரெல் இணைந்து டெல்லி இன்னிங்சை தொடங்கினர்.

Stubbs Rahul

மெக்கர்க் 9 ரன் எடுத்து ஆர்ச்சர் வேகத்தில் வெளியேற, அடுத்து வந்த கருண் நாயர் ரன் அவுட்/டக் அவுட்டானது டெல்லி அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.எனினும், போரெல் – கே.எல்.ராகுல் ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 63 ரன் சேர்த்தது.

ராகுல் 38 ரன் (32 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), போரெல் 49 ரன் (37 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். டெல்லி 13.5 ஓவரில் 105 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறிய நிலையில், ஸ்டப்ஸ் – கேப்டன் அக்சர் படேல் ஜோடி அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது.

அக்சர் 34 ரன் (14 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி தீக்‌ஷனா பந்துவீச்சில் ஜுரெல் வசம் பிடிபட்டார். டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன் குவித்தது.ஸ்டப்ஸ் 34 ரன் (18 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), அசுதோஷ் ஷர்மா 15 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராயல்ஸ் பந்துவீச்சில் ஆர்ச்சர் 2, தீக்‌ஷனா, ஹசரங்கா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 189 ரன் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது. ஜெய்ஸ்வால், கேப்டன் சாம்சன் இணைந்து துரத்தலை தொடங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி 5.3 ஓவரில் 61 ரன் சேர்த்தது.

சாம்சன் 19 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 31 ரன் விளாசிய நிலையில், காயம் காரணமாக ஓய்வு பெற்றார். அடுத்து வந்த பராக் 9 ரன்னில் ஜகா வாங்க, ஜெய்ஸ்வால் – நிதிஷ் ராணா ஜோடி 3வது விக்கெட்டுக்கு 36 ரன் சேர்த்தது. அரை சதம் விளாசிய ஜெய்ஸ்வால் 51 ரன் எடுத்து (37 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) குல்தீப் சுழலில் ஸ்டார்க் வசம் பிடிபட்டார்.

நிதிஷ் ராணாவும் தன் பங்குக்கு 51 ரன் (28 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஸ்டார்க் வேகத்தில் விக்கெட்டை இழக்க… ஆட்டம் பரபரப்பானது. துருவ் ஜுரெல் – ஹெட்மயர் இணைந்து 4வது விக்கெட்டுக்கு போராடினர்.

ஸ்டார்க் வீசிய கடைசி ஓவரில் 9 ரன் தேவைப்பட்டதால், வீரர்கள் முகத்தில் பதற்றம் தொற்றிக்கொள்ள… ரசிகர்க்கள்  இருப்புக்கொள்ள முடியாமல் தவித்தனர். ஸ்டார்க் துல்லியமான யார்க்கர்களை வீசி திணறடிக்க, 5 பந்தில் 1, 1, 2, 2, 1 என 7 ரன் மட்டுமே கிடைக்க, கடைசி பந்தில் 2 ரன் தேவை என்ற நிலையில் 1 ரன் எடுத்த ஜுரெல் (26 ரன், 17 பந்து, 2 சிக்சர்) 2வது ரன்னை பூர்த்தி செய்ய முடியாமல் ரன் அவுட்டானார். ஹெட்மயர் 15 ரன்னுடன் (9 பந்து, 1 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன் எடுக்க, ஆட்டம் சரிசமனில் (டை) முடிந்தது. இதையடுத்து, வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது. நடப்பு தொடரில் சூப்பர் ஓவருக்கு சென்ற முதல் போட்டி இது தான். டெல்லி தரப்பில் ஸ்டார்க் வீசிய அந்த ஓவரை ஹெட்மயர் – பராக் இணைந்து எதிர்கொண்டனர்.

Mitchel Starc

அதில் 0, 4, 1, 5 (பவுண்டரி + நோ பால்), 0 (பராக் ரன் அவுட்), 1 (ஹெட்மயர் ரன் அவுட்) என ராஜஸ்தான் அணிக்கு 11 ரன் கிடைத்தது. ராயல்ஸ் 1 பந்தை வீணடித்தது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, 6 பந்தில் 12 ரன்  என்ற இலக்குடன் டெல்லி களமிறங்கியது.

சந்தீப் ஷர்மா வீசிய அந்த ஓவரை கே.எல்.ராகுல் – ஸ்டப்ஸ் சந்தித்தனர். ராகுல் 2, 4, 1 ரன் எடுக்க, 4வது பந்தை சிக்சராக விளாசிய ஸ்டப்ஸ் டெல்லி அணிக்கு த்ரில் வெற்றியை வசப்படுத்தினார். அந்த அணி 6 போட்டியில் 5வது வெற்றியுடன் (10 புள்ளி) முதலிடத்துக்கு முன்னேறியது. ஸ்டார்க் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top