5 ஸ்டார் ஸ்டார்க்!
விசாகப்பட்டணம்: ஐபிஎல் தொடரின் 10வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதிய டெல்லி கேப்பிடல்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
ஒய்.எஸ்.ஆர் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில் (மார்ச் 30, பகல்/இரவு), டாஸ் வென்று பேட் செய்த சன்ரைசர்ஸ் 4.1 ஓவரில் 37 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. அபிஷேக் ஷர்மா 1 ரன் எடுத்து ரன் அவுட்டாக… இஷான் கிஷன் 2, நிதிஷ் குமார் 0, டிராவிஸ் ஹெட் 22 ரன் (12 பந்து, 4 பவுண்டரி) எடுத்து ஸ்டார்க் வேகத்தில் நடையை கட்டினர்.

இந்த நிலையில், அனிகேத் வர்மா – ஹெய்ன்ரிச் கிளாசன் இணைந்து 5வது விக்கெட்டுக்கு அதிரடியாக 40 பந்தில் 77 ரன் சேர்த்தனர். கிளாசன் 32 ரன் (19 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி மோகித் பந்துவீச்சில் நிகம் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த அபினவ் மனோகர் 4, கேப்டன் பேட் கம்மின்ஸ் 2 ரன் எடுத்து குல்தீப் சுழலில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் அதிரடியைத் தொடர்ந்த அனிகேத் 74 ரன் (5 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி குல்தீப் பந்துவீச்சில் பிரேசர் மெக்கர்க்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். முல்டர் 9, ஹர்ஷல் 5 ரன் எடுத்து ஸ்டார்க் வேகத்தில் வெளியேற, ஐதராபாத் அணி 18.4 ஓவரிலேயே 163 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
டெல்லி பந்துவீச்சில் ஸ்டார்க் 3.4 ஓவரில் 35 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். குல்தீப் 3, மோகித் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ஜேக் பிரேசர் மெக்கர்க் – டு பிளெஸ்ஸி ஜோடி 9 ஓவரில் 81 ரன் சேர்த்து வலுவான தொடக்கத்தை கொடுத்தது.

டு பிளெஸ்ஸி 50 ரன் (27 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), மெக்கர்க் 38 ரன் (32 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), கே.எல்.ராகுல் 15 ரன் (5 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஜீஷன் அன்சாரி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர்.
டெல்லி கேப்பிடல்ஸ் 16 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. அபிஷேக் போரெல் 34 ரன் (18 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 21 ரன்னுடன் (14 பந்து, 3 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஐதராபாத் பந்துவீச்சில் ஜீஷன் அன்சாரி 4 ஓவரில் 42 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
ஷமி, கம்மின்ஸ், அபிஷேக், முல்டர் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. டெல்லி கேப்பிடல்ஸ் தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்தது.5 விக்கெட் வீழ்த்தி அசத்திய ஸ்டார்க் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.