Nitish Rana

6 ரன்னில் சொதப்பியது சிஎஸ்கே

ராணா, ஹசரங்கா அசத்தல்

கவுகாத்தி: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெறும் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை கோட்டைவிட்டது.

பர்சபாரா கிரிக்கெட் அரங்கில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பேட் செய்யப் பணித்தார். ஜெய்ஸ்வால் 4 ரன் எடுத்து கலீல் பந்துவீச்சில் வெளியேற, சஞ்சு சாம்சன் – நிதிஷ் ராணா இணைந்து 2வது விக்கெட்டுக்கு 82 ரன் சேர்த்தனர்.

Nitish Rana

சாம்சன் 20 ரன் (16 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து நூர் அகமது சுழலில் ரச்சின் வசம் பிடிபட்டார். அடுத்து நிதிஷ் ராணா – கேப்டன் ரியான் பராக் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 38 ரன் சேர்த்தது. 21 பந்தில் அரை சதம் அடித்த ராணா 81 ரன் (36 பந்து, 10 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி அஷ்வின் சுழலில் விக்கெட் கீப்பர் தோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.

அடுத்து வந்தவர்களில் ஹெட்மயர் 19 ரன் எடுக்க, மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்தது.தீக்‌ஷனா 2, தேஷ்பாண்டே 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை பந்துவீச்சில் கலீல் அகமது, நூர் அகமது, பதிரணா தலா 2, அஷ்வின், ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

ஓவர்ட்டன், அஷ்வின், கலீல் அதிக ரன் வாரி வழங்கியதும் ராயல்ஸ் ரன் குவிப்புக்கு உதவியது. சிக்கனமாகப் பந்துவீசி 10 ரன்னுக்கு 1 விக்கெட் வீழ்த்திய ஜடேஜாவுக்கு 2 ஓவர் மட்டுமே கொடுத்தது ருதுராஜின் வியூக சறுக்கலாக அமைந்தது.

அடுத்து 20 ஓவரில் 183 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ரச்சின் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். திரிபாதி 23, ஷிவம் துபே 18, விஜய் ஷங்கர் 9 ரன் எடுத்து ஹசரங்கா பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினர். உறுதியுடன் விளையாடி அரை சதம் அடித்த ருதுராஜ் 63 ரன்னில் வெளியேற (44 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) கடைசி 4 ஓவரில் 54 ரன் தேவைப்பட்டது.

களத்தில் ஜடேஜா – தோனி இருந்ததால் சென்னை ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், அடுத்த 2 ஓவரில் 15 ரன் மட்டுமே கிடைக்க, கடைசி 2 ஓவரில் 39 ரன் தேவைப்பட்டது. தேஷ்பாண்டே வீசிய 19வது ஓவரில் 19 ரன் விளாச, சிஎஸ்கே தரப்பு உற்சாகம் அடைந்தது.

Wanindu Hasaranga

6 பந்தில் 20 ரன்… சந்தீப் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் தோனி விக்கெட்டை பறிகொடுக்க, சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்து 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஜடேஜா 32 ரன் (22 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), ஜேமி ஓவர்ட்டன் 11 ரன்னுடன் (4 பந்து, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ராயல்ஸ் பந்துவீச்சில் வனிந்து ஹசரங்கா 4 ஓவரில் 35 ரன்னுக்கு 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். ஆர்ச்சர், சந்தீப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். முதல் 10 ஓவரில் நிதானமாக விளையாடியது சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. சேசிங்கில் சிஎஸ்கே வியூகம் மீண்டும் சொதப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் 3 போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்ய, சென்னை அணி தொடர்ச்சியாக 2வது தோல்வியை சந்தித்தது.

நிதிஷ் ராணா ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். வாங்கடே மைதானத்தில் நடக்கும் 12வது லீக் ஆட்டத்தில் (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top