கை கொடுத்த நூர், பிரெவிஸ், துபே
கொல்கத்தா: ஐபிஎல் 18வது சீசன் 57வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதிய சிஎஸ்கே 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது.

ஈடன் கார்டன் அரங்கில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன் குவித்தது. கேப்டன் ரகானே அதிகபட்சமாக 48 ரன் (33 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார்.
ரஸ்ஸல் 38 ரன் (21 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), சுனில் நரைன் 26 ரன் (17 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), குர்பாஸ் 11 ரன்னில் பெவிலியன் திரும்பினர். மணிஷ் பாண்டே 36 ரன் (28 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்), ரமன்தீப் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
சென்னை பந்துவீச்சில் நூர் அகமது 4 ஓவரில் 31 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். காம்போஜ், ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து 20 ஓவரில் 180 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தொடக்க வீரர்கள் ஆயுஷ் மாத்ரே, டெவன் கான்வே இருவரும் டக் அவுட்டாக… அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது.
அதிரடி காட்டிய அறிமுக வீரர் உர்வில் படேல் 31 ரன் (11 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்), அஷ்வின் 8, ஜடேஜா 19 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, சிஎஸ்கே 5.2 ஓவரில் 60 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து பரிதவித்தது. இந்த நிலையில், டிவால்ட் பிரெவிஸ் – ஷிவம் துபே இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடினர்.
துபே அடக்கி வாசிக்க, மறுமுனையில் அதிரடி காட்டிய பிரெவிஸ் 22 பந்தில் அரை சதம் அடித்து சென்னை அணிக்கு நம்பிக்கை அளித்தார். அரோரா வீசிய 11வது ஓவரில் பிரெவிஸ் 6, 4, 4, 6, 6, 4 என ருத்ரதாண்டவமாடியது குறிப்பிடத்தக்கது. பிரெவிஸ் 52 ரன் (25 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி வருண் சுழலில் ரிங்கு சிங் வசம் பிடிபட… கேகேஆர் தரப்பு உற்சாகமடைந்தது.
எனினும், துபே – கேப்டன் தோனி ஜோடி பொறுப்புடன் விளையாடி வெற்றிக்காகப் போராடினர். துபே துணிச்சலாக 2 சிக்சர்களை தூக்கியடித்து அசத்த சென்னை அணி இலக்கை நெருங்கியது. இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 43 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
9 பந்தில் 10 ரன் மட்டுமே தேவை என்ற நிலையில் தேவையில்லாமல் சிக்சருக்கு ஆசைப்பட்ட துபே 45 ரன்னில் (40 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) விக்கெட் தானம் செய்ய, அடுத்து வந்த நூர் அகமது 2 ரன்னில் ஜகா வாங்கினார்.
இதனால், 6 பந்தில் 8 ரன் என களம் சூடானது. ரஸ்ஸல் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தை தோனி அநாயசமாக சிக்சருக்குத் தூக்க… வெற்றிப் பூனை சிஎஸ்கே பக்கம் 99 சதவீதம் தாவியது. அடுத்து டாட், 1 என்று கிடைக்க, 4வது பந்தை காம்போஜ் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம். அந்த 1 சதவீத வாய்ப்பில் ஏதாவது மேஜிக் நிகழுமா என கொல்கத்தா முகாம் ஆவலுடன் எதிர்பார்க்க… காம்போஜ் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் பவுண்டரி அடித்து சென்னை அணிக்கு 3வது வெற்றியை வசப்படுத்தினார்.

சிஎஸ்கே 19.4 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 183 ரன் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனை வீழ்த்தியது. தோனி 17 ரன் (18 பந்து, 1 சிக்சர்), காம்போஜ் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கேகேஆர் பந்துவீச்சில் அரோரா 3, ஹர்ஷித், வருண் தலா 2, மொயீன் அலி 1 விக்கெட் வீழ்த்தினர்.
பந்துவீச்சில் அமர்க்களப்படுத்திய நூர் அகமது ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த தோல்வியால் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அந்த அணி எஞ்சியுள்ள 2 லீக் ஆட்டங்களில் வென்றாலும், ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்புக்கு மற்ற அணிகளின் முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டியது கட்டாயம்.
- ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஜடேஜா (141 விக்கெட்) முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். அவர் டுவைன் பிராவோ சாதனையை (140) முறியடித்தார்.
- ஐபிஎல் போட்டிகளில் 100 முறை நாட் அவுட் என்ற சாதனை தோனி வசமானது.
- ஐபிஎல் போட்டிகளில் 100 விக்கெட் என்ற மைல்கல்லை வருண் சக்ரவர்த்தி விரைவாக எட்டி சாதனை படைத்தார்.