RR celebrates scaled

ராஜஸ்தான் ராயல்ஸ் ஆறுதல் வெற்றி

சிஎஸ்கே மீண்டும் மீண்டும் ஏமாற்றம்

டெல்லி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை வசப்படுத்தியது.

RR celebrates

அருண் ஜெட்லி அரங்கில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஆயுஷ் மாத்ரே, டெவன் கான்வே இணைந்து சிஎஸ்கே இன்னிங்சை தொடங்கினர். கான்வே 10, உர்வில் படேல் 0, மாத்ரே 43 ரன் (20 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்), அஷ்வின் 13, ஜடேஜா 1 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணிவகுக்க, சென்னை அணி 7.4 ஓவரில் 78 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது.

அதிரடியாக விளையாடிய டிவால்ட் பிரெவிஸ் 42 ரன் (25 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி மத்வால் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். ஷிவம் துபே 39 ரன் (32 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் தோனி 16 ரன் எடுத்து மத்வால் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுக்க, சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன் குவித்தது.

காம்போஜ் 5, நூர் அகமது 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராயல்ஸ் பந்துவீச்சில் ஆகாஷ் மத்வால் 4 ஓவரில் 29 ரன்னுக்கு 3 விக்கெட், யுத்வீர் சிங் 4 ஓவரில் 47 ரன்னுக்கு 3 விக்கெட் கைப்பற்றினர். தேஷ்பாண்டே, ஹசரங்கா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 20 ஓவரில் 188 ரன் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது.ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி இணைந்து துரத்தலை தொடங்கினர். ஜெய்ஸ்வால் அதிரடியாக 36 ரன் (19 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி காம்போஜ் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற வெளியேறினார்.

அடுத்து சூர்யவன்ஷி – கேப்டன் சாம்சன் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 98 ரன் சேர்த்து ராயல்ஸை வெற்றிப் பாதையில் செலுத்தியது. சாம்சன் 41 ரன் (31 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), சூர்யவன்ஷி 57 ரன் (33 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி அஷ்வின் வீசிய 14வது ஓவரில் ஆட்டமிழந்தனர். இதனால் சிஎஸ்கே தரப்பு சற்று உற்சாகம் அடைந்தது.

ரியான் பராக் 3 ரன் எடுத்து நூர் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழக்க, ராஜஸ்தான் வழக்கம்போலவே சேசிங்கில் சொதப்பி தோல்வியைத் தழுவும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், துருவ் ஜுரெல் – ஹெட்மயர் ஜோடி அதிரடியாக அடித்து விளையாட… ராயல்ஸ் 17.1 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை வசப்படுத்தி 18வது சீசனை நிறைவு செய்தது.

Akash Madhwal

ஜுரெல் 31 ரன் (12 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), ஹெட்மயர் 12 ரன்னுடன் (5 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை பந்துவீச்சில் அஷ்வின் 2, காம்போஜ், நூர் அகமது தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஆகாஷ் மத்வால் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு சீசனில் 10வது தோல்வியை பதிவு செய்து ரசிகர்களை மீண்டும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மே 25ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது.       

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top